ராஜஸ்தான் மாநிலம் சுரூ மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் வீடு அருகில், அவரது பெரியப்பா குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு இளம்பெண்ணின் அண்ணன் அதாவது பெரியப்பாவின் மகன் வசித்து வருகிறார். சகோதரர் உறவு முறை என்பதால் பெண்ணின் வீட்டிற்கு அவர் அடிக்கடி சென்று வருவது வழக்கமாக இருந்துள்ளது. அவர் எப்போதும் அந்த இளம்பெண்ணுடன் அதிகம் பேசுவது, விளையாடுவதுமாக இருந்துள்ளார். ஆனால், சகோதரன், சகோதரி என்பதால் யாரும் சந்தேகம் வரவில்லை.
இதனை பயன்படுத்திக் கொண்ட இளைஞர் பெரும் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார். கடந்த 2021 டிசம்பர் மாதம் வழக்கம்போல சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, இளம்பெண் தனிமையில் இருந்ததை தெரிந்து கொண்டு, அவரை மிரட்டி சகோதரி என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் அதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். இந்த விஷயத்தை வெளியே கூறினால் வீடியோவை இணையத்தில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். பின்னர், அந்த பெண்ணை அடிக்கடி பாலியல் உறவில் ஈடுபடுத்தியுள்ளார்.
சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்த கொடூரம் தொடர்ந்த நிலையில், இளம்பெண்ணின் நடவடிக்கையில் பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது. பெண்ணின் தாயார் அதை உணர்ந்து விசாரித்துள்ளார். அப்போது தான், சகோதரனால் தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.