கொரோனா வைரஸால் கடந்த 2, 3 ஆண்டுகளாக உலக நாடுகள் முடங்கி கிடந்தன. இந்த வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவர இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளில் பொது முடக்கம் அறிவித்தன. இதனால், பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதன்பிறகு கொரோனா வைரஸ் உருமாறி, பல அலைகளாக தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கோவிட் வைரஸின் புதிய வகையான எரிஸ் (Eris) என்ற வைரஸ் பிரிட்டனில் அதிவேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரஸின் துணை பிரிவாக இந்த எரிஸ் வைரஸ் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெடிக்கல் டெர்ம்படி எரிஸ் வைரஸை EG. 5.1 என்று குறிப்பிட்டு வருகின்றனர். இந்த வைரஸால் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் சீனாவில் வேகமாக பரவி வரும் எரிஸ் வைரஸை “ஆர்வத்தின் மாறுபாடு” என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. ஆனால், இது மற்ற வகைகளை விட பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வைரஸால் அமெரிக்காவில் 17% அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சீனா, தென்கொரியா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸானது ஒமைக்ரான் வைரஸுடன் ஒப்பிடுகையில் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இல்லை. ஆனாலும், இதுபற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் தேவை என்று கூறப்பட்டுள்ளது.