கேரளாவில் 3 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் போலவே உலக நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் நோய் பரவி வருவதால் மக்கள் மத்தியில் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நோயும் இந்தியாவில் பரவியதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 14ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த கேரள நபரின் மூலம் இந்தியாவில் குரங்கு அம்மை நோய் அடியெடுத்து வைத்துள்ளது. தற்போது கேரளாவில் 3 பேர் மற்றும் தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு என குரங்கம்மையால் இந்தியாவில் மட்டும் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக-கேரள எல்லையில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கேரள எல்லை வழியாக மூணாறு, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முதன்மை சாலை அமைந்துள்ளது. இந்த வழியாக கேரளாவில் இருந்து தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் தமிழகத்துக்கு பயணம் செய்கின்றனர். இதற்கிடையே, கேரளாவில் ஏற்கனவே 3 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக எல்லைக்குள் நுழையும் ஒவ்வொருவருக்கும் காய்ச்சல், உடலில் வீக்கம் போன்ற பாதிப்புகள் இருக்கின்றனவா? என பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டாலும், போதுமான மருத்துவ பணியாளர்களை அரசு பணியமர்த்தவில்லை என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.