சீனாவில் வேகமாகப் பரவும் BF.7 வகை கொரோனா, தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளதால், இதனால் என்னென்ன மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது. இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. சீனாவில் வேகமாகப் பரவும் BF.7 வகை கொரோனா தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

அறிகுறிகள் என்னென்ன..?
பொதுவாக டெல்டா கொரோனா தாக்கிய போது அதனால் மிகப்பெரிய அளவில் உடலில் அறிகுறிகள் ஏற்பட்டன. டெல்டா அறிகுறிகள் என்று பார்த்தால் வாசனை இழப்பு, சுவை இழப்பு, குளிர், உடல் கூச்சம், மூச்சு இறைப்பு ஆகியவை இருந்தன. ஆனால், ஒமைக்ரான் காரணமாக இந்த 4 அறிகுறிகள் ஏற்படுவது இல்லை. மாறாக வேறு சில 4 வித்தியாசமான அறிகுறிகள் ஏற்படுகின்றன. அதில் உடல் சோர்வு முக்கியமான அறிகுறியாக இடம்பிடித்துள்ளது. இதுபோக மூட்டுகளில் ஏற்படும் வலி இரண்டாவது பெரிய முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மூன்றாவதாக சளி. அதிகபட்ச சளி இருந்தால் அது ஒமைக்ரானாக இருக்கலாம். கடைசியாக தலைவலியும் நான்காவது அறிகுறியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக பொதுவான அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவையும் உள்ளன. இந்த அறிகுறிகள் உங்களுக்கும் தோன்றினாலும் நீங்கள் மருத்துவரை உடனே அணுக வேண்டும்.