மேற்கு வங்கத்தில் கடந்த இரண்டரை மாதங்களில் மொத்தம் 12,343 பேர் கடுமையான சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்..
மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அடினோவைரஸ் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். இது வேகமாக பரவக்கூடிய தொற்று நோயாகும்.. எனவே அடினோவைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தயாராகி வருகிறது..

அந்த வகையில், அடினோவைரஸ் பாதிப்பை கண்காணிக்க, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் H.K. திவேதி தலைமையில் 8 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு அடினோவைரஸ் பாதிப்புகளை விரைவில் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதன்படி தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் தனியார் பயிற்சியாளர்களுக்கு நிலைமையைக் கையாள பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “ இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) மற்றும் இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்கம் (ஐஏபி) ஆகியவை தங்கள் உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வைப் பரப்புவதிலும் ஈடுபடும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு நோயின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிய பொது அறிவுரைகள் வழங்கப்படும். ஆஷா பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மருத்துவமனைகளில், மூத்த மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் சிகிச்சை நெறிமுறைகளைக் கண்காணிப்பார்கள்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டரை மாதங்களில் மேற்கு வங்கத்தில் மொத்தம் 12,343 பேர் கடுமையான சுவாச நோய்த்தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது… பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் என்று சுகாதார துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுவரை, மாநிலத்தில் அடினோவைரஸ் தொற்று காரணமாக 19 பேர் இறந்துள்ளனர், அவர்களில் 13 பேர் கடுமையான இணை நோய்களை கொண்டிருந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.. ஆனால் அதே நேரத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன என்று கூறிய அவர், ஒரு நாளைக்கு சுமார் 800 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போத அந்த எண்ணிக்கை 600ஆக குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்..