PBKS vs KKR: ஐபிஎல் தொடரின் 31வது லீக் ஆட்டம் நேற்று (ஏப்ரல் 15) சண்டிகர் முலன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன், பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினர். பிரியான்ஸ் ஆர்யா 22 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஜோஸ் இங்கிலிஸ் 2, மேக்ஸ்வெல் 7, வதேரா 10, பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பஞ்சாப் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா சார்பாக ஹர்ஷித் ராணா 3 விக்கெட்களையும், நரைன் மற்றும் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்களையும் நார்கியா மற்றும் வைபவ் அரோரா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 112 ரன்கள் எடுத்தா வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிறது.
தொடக்க வீரர்களான டி காக் மற்றும் நரைன் முறையே 2 மற்றும் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த ரஹானே மற்றும் ரகுவன்சி சிறிது நேரம் களத்தில் தாக்குப்பிடித்து அணிக்கு ரன்களை சேர்க்க தொடங்கிய நேரத்தில் ரஹானே 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரகுவன்சியும் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து விக்கெட்களை சரித்தது பஞ்சாப் அணி.
இறுதியில், 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பில் சஹால் அதிகபட்சமாக 4 விக்கெட்களையும் மார்கோ யான்சன் 3 விக்கெட்களையும் எடுத்தனர். சிறிய டார்கெட் கொல்கத்தா அணி வெற்றி பெறும் என நினைத்த நிலையில், அந்த மனநிலையை உடைத்து பஞ்சாப் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
முன்னதாக இந்த சாதனை சென்னையின் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 2009-ல் பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் தோல்விக்கான காரணத்தைப் பற்றிப் பேசினால், மோசமான பேட்டிங்தான் தோல்வியைத் தந்தது. இந்தப் போட்டிக்கான ஆட்ட நாயகனாக சாஹல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.