‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் நடிகர் அபிநய், தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குனரும், நடிகருமான தனுஷின் முதல் அறிமுகம் படம் துள்ளுவதோ இளமை. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை கஸ்தூரி ராஜா இயக்கினார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் தனுஷ் மட்டுமின்றி, பல நடிகர்கள் அறிமுகமானார்கள். அதில் ஒருவர்தான் அபிநய்.
இவர் ஜங்ஷன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பின்னர், அமெரிக்கா மாப்பிள்ளை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதுவரை தமிழில் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2014இல் வெளியான சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின், அவருக்கு எந்த சினிமா வாய்ப்பும் இல்லாததால் வறுமையில் இருந்து வந்தார். இதுகுறித்து பல யூடியூப் சேனல்களில் தன்னுடைய நிலைமை எடுத்து கூறி வந்தார். அதேபோல், தினமும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வருவதாக கூறியிருந்தார். தன்னுடன் நடித்த நடிகர்கள் நமக்கு கை கொடுப்பார்கள் என எண்ணியிருந்த நிலையில், எந்த வாய்ப்பும் கிடைக்காமல் போனது.
இப்படியான நிலையில்தான், நடிகர் அபிநவ் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியான வீடியோவில், அவர் லிவர் சிரோசிஸ் (Liver Cirrhosis) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டுள்ளதால், சிகிச்சைக்கு ரூ.28 லட்சம் தேவைப்படுவதாகவும் உதவி கோரியிருந்தார். தற்போது அபிநவ், வயிறு வீங்கி ஆள் எலும்பும் தோலுமாக இருக்கிறார்.
பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தபோது, அவருடைய அம்மாவின் மரணம் அவரை மேலும் வேதனையடைய வைத்தது. பின்னர், வீட்டில் இருந்த அனைத்தையும் விற்றுவிட்டு, ஒரு குட்டி ரூமில் தங்கியிருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்தார். தற்போது மருத்துவ சிகிச்சைக்காக உதவி கேட்டுள்ளார்.