IND VS SA T20: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் திலக் வர்மா, சஞ்சு சாம்சனின் வாணவேடிக்கை ஆட்டத்தில் 135 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை வென்றது.
தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி நான்கு போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றிருந்தது. நேற்று நான்காவது, கடைசி போட்டி ஜோகனஸ்பர்க்கில் நடந்தது. இத்தொடரில் முதன் முறையாக ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. யான்சென் வீசிய முதல் ஓவரில் அபிஷேக் அடித்த பந்தில் கிடைத்த ‘கேட்ச்’ வாய்ப்பை, ஹென்ரிக்ஸ் நழுவவிட்டார். கோயட்சீ வீசிய 2வது ஓவரில் சாம்சன், தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். தொடர்ந்து சிபம்லா ஓவரிலும் பவுண்டரி, சிக்சர் அடித்தார். போட்டியின் 5வது ஓவரை வீசினார் சிம்லேன். இதன் முதல் 3 பந்தில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த அபிஷேக், கடைசி பந்தையும் சிக்சருக்கு விரட்ட, 24 ரன் எடுக்கப்பட்டன. மீண்டும் வந்த சிபம்லா பந்தில், அபிஷேக் (36 ரன், 18 பந்து) அவுட்டானார்.
இந்திய அணி ‘பவர்பிளே’ ஓவர் (6) முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 73 ரன் எடுத்தது. சாம்சனுடன் இணைந்தார் திலக் வர்மா. மஹாராஜ் வீசிய 9 வது ஓவரில், திலக் வர்மா அடுத்தடுத்து சிக்சர் அடித்து மிரட்டினார். இந்திய அணி 8.3 ஓவரில் 100/1 ரன்களை எட்டியது. ஸ்டப்ஸ் வீசிய 10 வது ஓவரின் முதல் இரு பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார் சாம்சன். இதே ஓவரில் திலக் வர்மா, இரண்டு பவுண்டரி அடிக்க, 21 ரன் எடுக்கப்பட்டன.
அடுத்து வந்த சிபம்லா ஓவரில் (12வது) சாம்சன் 1, திலக் வர்மா 2 சிக்சர் அடித்தனர். மீண்டும் மிரட்டிய திலக் வர்மா, மார்க்ரம் வீசிய 14வது ஓவரின் கடைசி 4 பந்தில், 4, 6, 6, 4 என ரன் மழை பொழிந்தார். இந்திய அணியின் ஸ்கோர் 14.1 வது ஓவரில் 200/1 ரன்களை எட்டியது. சாம்சன், 3வது சதம் எட்டினார். திலக் வர்மா 41வது பந்தில் சதம் கடந்தார். இந்திய அணி 20 ஓவரில் 283/1 ரன் குவித்தது. திலக் வர்மா (120), சாம்சன் (109) அவுட்டாகாமல் இருந்தனர்.
கடின இலக்கைத் துரத்திய தென் ஆப்ரிக்க அணி, அர்ஷ்தீப் சிங் ‘வேகத்தில்’ அதிர்ந்தது. ஹென்ரிக்ஸ், கிளாசன் ‘டக்’ அவுட்டாக, மார்க்ரம் 8 ரன்னில் திரும்பினார். பாண்ட்யா பந்தில் ரிக்கிள்டன் (1) சிக்கினார். தென் ஆப்ரிக்க அணி 10 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த மில்லர், ஸ்டப்ஸ் போராடினர்.
ஐந்தாவது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த போது, வருண் சக்ரவர்த்தி சுழலில் மில்லர் (36) வெளியேறினார். மறுபக்கம் ஸ்டப்ஸ் (43), பிஷ்னோய் பந்தில் வீழ்ந்தார். சிம்லேன் (2), கோயட்சீ (12) நிலைக்கவில்லை. கடைசியில் சிபம்லா (3) அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி 18.2 ஓவரில் 148 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 135 ரன்னில் வெற்றி பெற்றது. இந்திய சார்பில் அர்ஷ்தீப் 3, வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் சாய்த்தனர். இதனிடையே இந்த தொடரில் கேம் சேஞ்சர் விருது வருண் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக, வெற்றிக்கோப்பையை கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் வழங்கப்பட்டது. அப்போது நிர்வாகியின் கையை பிடித்து அழைத்து சென்ற சூர்ய குமார் யாதவ், புதிய வீரர்களுக்கு மத்தியில் கோப்பையை வழங்கிவிட்டு சென்றார். முன்னாள் கேப்டன் தோனியும், தான் வெற்றிபெறும் தொடர்களில் கோப்பையை சக வீரர்களிடம் வழங்கிவிட்டு ஒரு ஓரத்தில் நிற்பார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
இதன்மூலம் சர்வதேச ‘டி-20’ல் ஒரே ஆண்டில் 3 சதம் அடித்த முதல் வீரர் ஆனார் இந்தியாவின் சாம்சன். இதுமட்டுமல்லாமல், வங்கதேசத்திற்கு எதிராக அக்டோபரில் நடைபெற்ற போட்டியில் அவர் 111 ரன்கள் விளாசினார். இதனிடையே ஒரே தொடரில் 2 சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் திலக் வர்மாவும் இணைந்துள்ளார்.
மேலும், டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக சதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை திலக் வர்மா பிடித்துள்ளார். 35 பந்துகளில் சதமடித்து ரோகித் ஷர்மா முதலிடத்தில் உள்ளார். 40 பந்துகளில் சதம் விளாசி 2வது இடத்தில் சஞ்சு சாம்சனும், நேற்றைய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 41 பந்துகளில் சதம் விளாசி 3வது இடத்தை திலக் வர்மா பிடித்துள்ளார்.