கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள உறையூரில் சென்ற 23ஆம் தேதி ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 19 சவரன் நகை மற்றும் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்டவற்றை 2 பேர் திருடிக் கொண்டு அந்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த யுவராஜ், பாலாஜி உள்ளிட்டோர் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர் என்ற விவரம் தெரிய வந்தது. மேலும் இருவரும் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்று அவர்களை தனிப்படை காவல்துறையினர் பின் தொடர்ந்தனர். மேலும் அவர்கள் எந்த சுங்க சாவடிகளும் நிற்காமல் சென்றதால் தனிப்படை காவல்துறையினரும் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர்.
இத்தகைய நிலையில் தான் குற்றவாளிகள் ஒட்டி வந்த கார் திருவண்ணாமலை எல்லைக்குள் நுழைந்தவுடன் அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தனிப்படை காவல்துறையினர் தகவல் கொடுத்திருக்கின்றனர்.
அந்த தகவலின் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினர் அந்த திருட்டு காரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு பின் தொடர்ந்து விரட்டி சென்றதாக கூறப்படுகிறது. திரைப்பட பாணியில் சாலையில் தடுப்புகள் அமைத்தும், கனரக வாகனங்களை குறுக்கே நிறுத்தியும் ஒரு வழியாக அந்த திருடர்களின் காரை காவல்துறையினர் மடக்கியுள்ளனர்.
ஆனாலும் காருக்குள்ளே இருந்த 2 பேரும் வெகு நேரம் ஆன பின்னரும் காரை விட்டு வெளியே வராததால் காரின் கண்ணாடியை உடைத்து துப்பாக்கி முனையில் அவர்கள் இருவரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.