திமுக அரசின் மிக முக்கிய வாக்குறுதியான உரிமைத் தொகை எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், 2023ஆம் ஆண்டில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, நீட் தேர்வு ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000, முதியோர் ஓய்வூதியம் ரூ.1500, கல்வித் துறை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருதல் என குறிப்பிடத்தக்க வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தை அரசு எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு பெருமளவில் எழுந்துள்ளது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில், உரிமைத் தொகை திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் முதல்வர் முக.ஸ்டாலின் உரிய நேரத்தில் அறிவிப்பார் என்றும் அமைச்சர்கள் அவ்வப்போது கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் சிறப்பு பரிசாக மகளிருக்கு உரிமைத் தொகையான ரூ.1000 ரூபாயை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பார் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் சபாநாயகர் அப்பாவு. லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மகளிரின் மனம் கவரும் அறிவிப்பை இந்த முறையாவது வெளியிடுவாரா? முதல்வர் ஸ்டாலின் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.