மோசடியில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் ஏடிஎம்-ல் OTP அடிப்படையிலான பணம் எடுக்கும் முறையை எஸ்பிஐ தொடங்கியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.. இந்நிலையில் OTP-அடிப்படையிலான பணம் திரும்பப் பெறும் முறையை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.. இதுகுறித்த அறிவிப்பை எஸ்பிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் எஸ்பிஐ வங்கி பதிவிட்டுள்ளது..

அந்த பதிவில் ” எஸ்பிஐ ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான எங்கள் OTP அடிப்படையிலான பணம் திரும்பப் பெறும் முறையானது மோசடி செய்பவர்களுக்கு எதிரான தடுப்பூசியாகும். மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது..
ஏடிஎம்களில் அங்கீகரிக்கப்படாத பணப்பரிவர்த்தனைகளில் இருந்து இது வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும், எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ. 10,000 மற்றும் அதற்கு மேல் எடுக்கும் போது மட்டுமே OTP-அடிப்படையிலான பணம் எடுக்கும் முறை பொருந்தும். எனவே நீங்கள் ரூ. 10,000 அல்லது அதற்கு மேல் எடுத்தால், OTP அடிப்படையிலான பணத்தை எடுக்கும் முறையைப் பின்பற்ற வேண்டும்.
OTP-அடிப்படையில் எப்படி எஸ்பிஐ வங்கியில் பணத்தை எடுப்பது..?
- வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்பிஐ வங்கி OTP அனுப்பும்.
- OTP என்பது நான்கு இலக்க எண்ணாகும், இது ஒரு ஒற்றை பரிவர்த்தனைக்கு பயனரை அங்கீகரிக்கிறது.
- இது எஸ்பிஐ கார்டு வைத்திருப்பவர்களை அங்கீகரிக்கப்படாத ஏடிஎம்களில் பணம் எடுப்பதில் இருந்து பாதுகாக்கும்.
எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து ரூ. 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த OTP அடிப்படையிலான பணம் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி கடந்த ஆண்டு ஜனவரி முதல் செயல்பட்டு வருகிறது என்பது நினைவிருக்கலாம்.