அரசு பணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் நேரில் சென்று உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க, ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்க தபால் துறையின் மூலம் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி தபால் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்படும். இதுதான் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் ஆகும்.
இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், “மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் பெற தங்கள் வருடாந்திர ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில், மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘ஜீவன் பிரமான்’ திட்டத்தின் மூலம், தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா தபால் வங்கி சார்பில் தபால்காரர்கள் ஓய்வூதியதாரர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று, அவர்களின் கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், செல்போன் எண், பி.பி.ஓ. எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கவும் முடியும்.
இந்த சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகம் அல்லது தபால்காரரை தொடர்பு கொண்டு பயனடையலாம். https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரி மூலம் அல்லது ‘Postinfo’ செயலியை பதிவிறக்கம் செய்து பதிவு செய்யலாம். அனைத்து தபால் அலுவலகங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.
Read more ; குளிர்காலத்தில் காலை நடைப்பயிற்சி நல்லதா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்..