வாக்காளர்களின் விபரங்களை வரும் அக்டோபர் 18 ம் தேதி வரை வீடு வீடாக சென்று சரிபார்க்க உள்ளனர்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் 01.01.2025 அன்று தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பணிகள் 20.08.2024 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2025-ஐ முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 06.01.2025 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு முன் திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி 01.01.2025- ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்திடவும் அதன் அடிப்படையில் வரும் 06.01.2025 -ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. முன்னதாக வாக்குசாவடி மறுசீரமைப்பு பணி (Rationalization of Polling Stations) மேற்கொள்ளப்படவுள்ளது. வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த பணியின் முதல் நடவடிக்கையாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குசாவடி மைய பகுதியில் வசித்து வரும் அனைத்து வாக்காளர்களின் விபரங்களை வரும் அக்டோபர் 18 ம் தேதி வரை வீடு வீடாக சென்று சரிபார்க்க உள்ளனர்.
கள ஆய்வின் போது ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்கள் அவர்களில் எவ்வளவு பேர் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளார்கள் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திலும் விடுப்பட்டுள்ள வாக்காளர்களை கண்டறிந்து சேர்த்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சரிபார்ப்பு பணியானது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தால் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள செயலி வழியாக (BLO APP) மேற்படி பணியினை மேற்கொள்ள உள்ளனர்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இல்லம் தேடி வரும்போது வாக்காளர்கள் தங்களது பெயர், வயது, புகைப்படம். முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள தெரிவிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்கவும். இறந்துபோன அல்லது நிரந்தரமாக புலம் பெயர்ந்த நபர்களை கண்டு நீக்கம் செய்திடலாம். வீட்டிற்கு கணக்கெடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து அவர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.