Captain Vijayakanth: மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்ட் 25-ம் தேதி அழகர்சாமி – ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயது முதலே பள்ளிப்படிப்பைவிட சினிமா மீதான பிடிப்பே விஜயகாந்த்தை ஊட்டி வளர்க்க பத்தாம் வகுப்போடு நின்றுபோனது அவர் படிப்பு. அதன் பிறகு, கீரைத்துரையிலுள்ள அவருடைய தந்தையின் அரிசி ஆலையில் வேலைசெய்தவர், தன் நண்பர்களின் உந்துதலால் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு சென்னைக்கு இடம்பெயர்ந்தார். பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியானஇனிக்கும் இளமை’ படத்தில் நடிகனாகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார்.
தொடர்ந்து, சட்டம் ஒரு இருட்டறை’,தூரத்து இடிமுழக்கம்’, உழவன் மகன்’,சிவப்பு மல்லி’ என வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்தார். கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார். புரட்சிக் கலைஞர்’ என்ற பட்டத்துடன் தனது 100-வது படமானகேப்டன் பிரபாகரன்’ படத்திலிருந்து `கேப்டன்’ என்ற அடைமொழியும் அவருக்குச் சேர்ந்துகொண்டது.
விஜயகாந்த்தின் திறமையும் குணாதிசயமும் அவரை 1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக்கின. பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா எனத் தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.
2002-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து `நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை!’ என்கிற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை நெய்வேலியில் நடத்தினார். ஏற்கெனவே நடிகராக இருந்தபோதே 1984, 1986 ஆண்டுகளில் ஈழத்தமிழர்களுக்காகப் பல உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தியிருக்கிறார் விஜயகாந்த்.
இவை தவிர, சினிமாத்துறையில் இருக்கும்போதே அரசியல் வாசனை தெரியாதபோதே பல பொதுநல சேவைகளையும் செய்துவந்தார் விஜயகாந்த். 1989-ல் ஈரோட்டில் இலவச மருத்துவமனை, சென்னை சாலிகிராமத்தில் இலவச மருத்துவமனை, ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு லட்சக்கணக்கில் கல்வி நிதியுதவி, எம்.ஜி.ஆர் காது கேளாதோர்-வாய் பேசாதோர் பள்ளி, லிட்டில் ஃபிளவர் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நன்கொடை, தமிழகம் முழுவதும் 60 இடங்களில் இலவச கணினிப் பயிற்சி மையம், இலவச திருமண மண்டபங்கள், ஏராளமான ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம், கேப்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி எனக் கலக்கினார். குஜராத் பூகம்பம், கார்கில் போர், சுனாமி, கும்பகோணம் பள்ளி தீ விபத்து எனப் பல சோக நிகழ்வுகளுக்குத் தன் சொந்தச் செலவில் நிவாரணங்களை கொடுத்து உதவினார்.
அந்த நிலையில்தான், 2000-ம் ஆண்டு, பிப்ரவரி 12-ல் தனது ரசிகர் மன்றத்துக்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, 2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, பலர் வெற்றியும் அடைந்தனர். தொடர்ந்து, 2005-ம் ஆண்டு, செப்டம்பர் 14-ம் தேதி மிகப்பெரிய மாநாட்டை மதுரையில் நடத்தி, `தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த்.
கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவடையாத நிலையில், 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டி என்று கூறி 232 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியவர், தான் போட்டியிட்ட விருத்தாசலம் தொகுதியில் அமோக வெற்றிபெற்றார். மற்ற வேட்பாளர்கள் தோல்வியடைந்தாலும் கணிசமான வாக்குகளைப் பெற்று, தே.மு.தி.க-வுக்கு 8.4 சதவிகித வாக்குகளைப் பெற்றுத்தந்தனர். அதைத் தொடர்ந்து, 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்து நின்று, தோல்வியைத் தழுவினாலும் 10 சதவிகித வாக்குகளை தே.மு.தி.க பெற்றது.
தனித்தே போட்டியிட்டுவந்த நிலையில், முதன்முறையாக 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த விஜயகாந்த், 29 இடங்களில் வெற்றிபெற்று தி.மு.க-வையே பின்னுக்குத் தள்ளி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். அதன் பிறகு அரசியலிலும் விஜயகாந்தின் உடல்நிலையிலும் இறங்குமுகம்தான் ஏற்பட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல், 2019 நாடாளுமன்றத்தேர்தல், 2021 சட்ட மன்றத் தேர்தல் வரை விஜயகாந்தின் தே.மு.தி.க படுதோல்வியைச் சந்தித்தது. அதேபோல, 2021 தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க முடியாத அளவுக்கு விஜயகாந்த்தின் உடல்நிலையும் சோர்வடைந்தது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் எடுத்துவந்தார்.
இந்த நிலையில்தான், கடந்த மாதம் 18-ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். `வழக்கமான மருத்துவப் பரிசோதனைதான், ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார்’ என தே.மு.தி.க தலைமைக் கழகம் தெரிவித்துவந்த நிலையில், 29-11-2023 அன்று மியாட் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜயகாந்த்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாள்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. எனினும், அதிலிருந்து மீண்டு வந்த விஜயகாந்த் வீடு திரும்பினார்.
அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, தே.மு.தி.க தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி கடந்த 14-ம் தேதி நடந்த கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தில், விஜயகாந்த் முன்னிலையில் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார், பிரேமலதா. பின்னர் விஜயகாந்த்தின் காலில் விழுந்து ஆசியும் பெற்றார். இந்த நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவால் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில்தான் அந்தத் துயரச் செய்தி மருத்துவமனை அறிக்கை வழியாக வந்தது. “உடல்நிலை சீரற்ற நிலையில், மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு நிமோனியா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஏற்கெனவே நுரையீரல் தொற்று இருந்த நிலையில், அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தது. அதனால் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தி தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார்.
இந்தநிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி இன்று(28.12.2024) பேரணி நடக்கவுள்ளது. மேலும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பேரணிக்கு கலந்து கொள்ள தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Readmore: இனி அண்ணாமலை வாழ்க்கை முழுவதும் செருப்பு அணிய முடியாது…! அமைச்சர் ரகுபதி கொடுத்த பதிலடி…!