கோடை காலம் தொடங்கிவிட்டாலே இந்தியாவில் பல இடங்களில் வெயில் உச்சத்தைத் தொடும். அதுவும் இந்தாண்டு பிப்ரவரி மாதமே கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவானது. இந்தாண்டு கோடை கால வெப்பம் என்பது முந்தைய ஆண்டுகளை விட தீவிரமாகவே இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கேற்ப வெயில் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதிலும் கரூர், நாகை மதுரை மாவட்டங்களில் இயல்பு நிலையில் இருந்து வெப்பம் அதிகமாகவே இருந்துள்ளது.
இந்நிலையில், வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று (ஏப்ரல் 23) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோல், ஏப்ரல் 24 மற்றும் ஏப்ரல் 25ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.