நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட் மூலம் சந்திரயான் – 3 விண்கலத்தை கடந்த மாதம் 14ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, விண்ணில் செலுத்தியது. சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறக்க, விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை காண்பதற்காக பல உலக நாடுகளும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளன.
நிலவில் தரையிறங்கிய பின்னர் நிலவில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் சந்திரயான் – 3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, லேண்டரில் இருந்து ரோவர் கருவி வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்க உள்ள நிலையில், பெங்களூரு இஸ்ரோ மையத்தில் 500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பெங்களூரு இஸ்ரோ மையத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.