கிரிக்கெட்டின் ‘மெக்கா’ என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், இதே நாள் ஜூன் 25, 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகத்தான மகிழ்ச்சியையும் பெருமையையும் தந்தது.
கேப்டன் கபில்தேவ் தலைமையிலான இந்த வெற்றி, இந்திய வீரர்களின் குழுப்பணி, உறுதிப்பாடு மற்றும் அசைக்க முடியாத மனப்பான்மையை வெளிப்படுத்தியது. குறிப்பாக உலகக்கோப்பையை கையில் ஏந்திக்கொண்டு, கபில் தேவ் லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் நின்ற காட்சியை கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களின் நற்பெயரும் நட்சத்திர பலமும் இல்லாத இந்திய அணி, பின்தங்கிய நிலையில் 1983 உலகக்கோப்பை போட்டிக்குள் நுழைந்தது. இருப்பினும், போட்டி முழுவதும் இந்தியா வீரர்கள் தங்களுடைய முழு பலத்தை வெளிப்படுத்தி அப்போதைய சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் உட்பட முக்கிய அணிகளை தோற்கடித்தனர். எதிர்ப்பாராத அணியாக உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்திற்கு சென்று கோப்பையும் வென்றது கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி.
இந்த வெற்றி, கிரிக்கெட்டில் இந்தியா ஒரு சக்தியாக உருவெடுக்க வழி வகுத்தது மற்றும் அடுத்தடுத்த தலைமுறை வீரர்களுக்கு வெற்றி மனப்பான்மையை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக, சர்வதேச கிரிக்கெட்டில், உலகக் கோப்பைகளில் வெற்றிகள் உட்பட. பல மைல்கற்களை எட்டியுள்ளது இந்தியா இவை அனைத்துக்கும் முன்னோடியாக திகழ்ந்தது அந்த ஒரு வெற்றி தான். கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த நாள் எப்போதுமே முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது.