உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கரசேவர்களால் கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் பாபர் மசூதி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. எனவே, நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அந்த வகையில், வழிபாட்டு தளங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் பெட்டிகள், நடைமேடைகள், வாகனம் நிறுத்துமிடங்களில் சோதனை செய்தனர்.
கோவை மட்டுமின்றி சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், புதுச்சேரி மாநில எல்லையான கோரிமேடு, கணகசெட்டிக்குளம், கன்னியக்கோவில், மதகடிப்பட்டு ஆகிய பகுதியில் அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். ரயில் நிலையத்தில் சாதாரண உடையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதே போல கோவை மாநகரிலும் போலீசார் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.