National Cinema Day (தேசிய சினிமா தினம்) இன்று தேசிய சினிமா தினத்தையொட்டி சினிமா டிக்கெட்டுகள் 99 ரூபாய்க்கு விற்கப்படும் என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
சினிமா என்பது மகிழ்ச்சியின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. உலகளவில் சினிமா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் இந்தியாவில் சினிமாவை எமோஷனலாக பார்ப்பவர்கள் உண்டு. அதனால்தான் உலகிலேயே அதிகம் சினிமா தயாராகும் நாடாக இந்தியா விளங்குகிறது. அதுமட்டுமின்றி சினிமா மீது இருக்கும் மோகத்தின் காரணமாக பலர் தங்களது வாழ்க்கையை சினிமாவுக்குள்ளேயே செலவு செய்ய தயாராகிறார்கள். அதில் பலர் வெல்கிறார்கள் பலர் காணாமல் போகிறார்கள். இருந்தாலும் மோகம் மட்டும் குறைந்தபாடில்லை.
இந்திய அளவில் இப்படி தமிழ்நாட்டில் ஒருபடி மேலே இருக்கும். சினிமாவையும், சினிமாக்காரர்களையும் தங்களின் ஒரு பகுதியாகவே பார்ப்பவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அதனால்தான் இதுவரை தமிழ்நாட்டை பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என நான்கு சினிமாக்காரர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர். மேலும் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். விஜய் அரசியலுக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது.
தேசிய சினிமா தினத்தை முதல்முதலில் கொண்டாட துவங்கியது அமெரிக்கா தான். அங்கு வாழும் மக்கள். வாழ்க்கைமுறை மிகவும் நவீன முறையை கொண்டுள்ளதால், திரையரங்கம் வந்து திரைப்படங்கள் படம் பார்ப்பது குறைந்து கொண்டே சென்றது. எனவே கடந்த சில வருடங்களாக தேசிய சினிமா தினம் என ஒரு நாளை கடைபிடிக்க துவங்கினர். இந்நிலையில் தேசிய சினிமா தினம் (அக்டோபர் 13)இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா 99 ரூபாய்க்கு சினிமா டிக்கெட்டுக்களை விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் கூடுதலாக ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்று நம்பப்படுகிறது.
திரைப்படங்களுக்கான டிக்கெட்டுக்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அதுமட்டுமின்றி Book My Show, Paytm போன்ற செயலிகளின் மூலமாகவும் மல்டிபிளக்ஸ் தியேட்டருக்கு தொடர்புடைய இணையதளங்களிலும் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது. கடந்த வருடமும் இதேபோன்ற முறையை மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் செய்தபோது 80 சதவீத டிக்கெட்டுக்கள் விற்பனை ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.