தேசிய சுற்றுலா தினம் என்பது நமது நாட்டின் தனித்துவ பண்புகளை கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 அன்று கொண்டாடப்படுகிறது, பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பதற்கும், இந்தியாவின் பல சுற்றுலாத் தலங்கள் – அது சூழலியல், வணிகம், பாரம்பரியம் அல்லது கல்வி சார்ந்ததாக இருந்தாலும் அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்திய சுதந்திரத்தின் அடுத்த ஆண்டு அதாவது 1948 இல் நாட்டில் சுற்றுலா தினத்தை கொண்டாடுவது தொடங்கியது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, சுதந்திர இந்தியாவில் அதை ஊக்குவிக்கும் முயற்சியாக சுற்றுலாப் போக்குவரத்துக் குழு உருவாக்கப்பட்டது. குழு அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1951 இல் கொல்கத்தா மற்றும் சென்னையில் சுற்றுலா தினத்தின் பிராந்திய அலுவலகங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் சுற்றுலா அலுவலகங்கள் கட்டப்பட்டன. 1998 ஆம் ஆண்டில், சுற்றுலா மற்றும் தகவல் தொடர்பு அமைச்சரின் தலைமையில் சுற்றுலாத் துறை நிறுவப்பட்டது.
தேசிய சுற்றுலா தினத்தின் நோக்கம், சுற்றுலாத் துறையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சுற்றுலாவின் சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார பங்களிப்புகளின் அடிப்படையில் சுற்றுலாவின் மதிப்பு குறித்து உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஆகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2 சதவீதமும், வேலைவாய்ப்பில் 8.1 சதவீதமும் இத்துறை பங்களிப்பதால், நாட்டின் பொருளாதாரத்திற்கு சுற்றுலாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் இந்தாண்டின் கருப்பொருள் நிலையான பயணங்கள்! காலமற்ற நினைவுகள் ஒவ்வொரு ஆண்டும், நாட்டின் சுற்றுலாவின் பல்வேறு அம்சங்கள் சிறப்பிக்கப்படும் வகையில் தீம் உள்ளது. இந்த நாளில், நாடு முழுவதும் மற்றும் மாநில அளவில் பல வகையான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேசிய சுற்றுலா தினத்தில், கருத்தரங்குகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் நாடு முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.