தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதே போல், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5 ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில், நேற்று (மார்ச் 27) முடிவடைந்தது. இந்த நிலையில்,10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (மார்ச் 28) தொடங்கி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இன்று தொடங்கவுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை, 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத்தவுள்ளனர்.
இன்று தொடங்கவுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வினை கண்காணிக்க 48 ஆயிரத்து 426 அறைக் கண்காணிப்பாளர்களும், 4 ஆயிரத்து 858 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வுகளை கண்காணிக்க நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான பணிகளையும் வரையறை செய்து அரசுத் தேர்வுத்துறை வழங்கியுள்ளது. அதில், தேர்வுகள் நடைபெறும் போது, பறக்கும் படையில் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறக்கும் படை வழிமுறைகள்:
அனுபவமிக்க, நேர்மையான ஆசிரியர்கள் பறக்கும் படையில் நியமிக்கப்பட வேண்டும். (குறைந்தபட்சம் 5 ஆண்டு அனுபவம் கட்டாயம்).
பெண் தேர்வர்களை சோதனை செய்ய பெண் ஆசிரியர்கள் பறக்கும் படையில் இருக்க வேண்டும்.
எவரிடமும் அச்சமின்றி, பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
புகார்களுக்கு இடமளிக்கக் கூடிய தேர்வு மையங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
10 அறைகளுக்கு 1 நிலையான கண்காணிப்பாளர் என்ற விகிதத்தில் கண்காணிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் செயல்பட வேண்டும்.
முறைகேடு கண்டுபிடித்தால், தேர்வரின் விடைத்தாள் மற்றும் ஆதாரங்களை கைப்பற்றி, அவரது பதிவெண்ணைக் குறிப்பிட்டு, அவரது கையொப்பத்துடன், முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தேர்வர்கள் மனநிலை, உடல்நிலை பாதிக்காமல் செயல்பட வேண்டும்.
முறைகேடுகள் கண்டுபிடிக்கப்படும் நிலையில், அது தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல் வெளியிடக்கூடாது.
முதன்மைக் கல்வி அலுவலர் அல்லது மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் மட்டும் தெரிவிக்க வேண்டும்.
முதலில் சந்தேகத்திற்குரியவர்களை மட்டுமே சோதிக்க வேண்டும்.
தேர்வு முடிந்த பிறகு, மாணவர்கள் அமைதியாக வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும்.
தவறுகள் காணப்பட்டால், விருப்பு-வெறுப்பின்றி கடமை ஆற்ற வேண்டும்.
வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் வெளிப்புற பகுதிகளை கண்காணித்து, முறைகேடு ஏதுமில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
தேர்வு கட்டுப்பாடு அறை எண்கள்: 9498383075 / 9498383076 ஆகிய தேர்வுக் கட்டுப்பாட்டு தொடர்பு எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள்/தேர்வர்கள்/பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெறலாம். இதற்கென அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும்.
தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேர்வு நேரங்களில் தேர்வர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் குற்றங்களுக்கு தக்கவாறு தண்டனைகள் வழங்கப்படும். மேலும் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் /முயலுமேயானால் பள்ளித் தேர்வு மையத்தினை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை இரத்து செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
Read More: ரயில்வே துறையில் 9900 காலியிடங்கள்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..