HBD Abdul Kalam: இந்திய ஏவுகணைகளின் தந்தை, இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர் என போற்றப்படும் கனவு நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று (அக்15). இந்நாளில் அவரை நினைவு கூர்வது நமது கடமை.
இந்திய ஏவுகணைகளின் தந்தை, மக்களின் ஜனாதிபதி என அழைக்கப்பட்டவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். தமிழ்நாட்டின் கடைக்கோடியான இராமேஸ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 வது நாளில் ஜைனுலாபுதீன் – ஆஷியம்மா தம்பதியினரின் 5 ஆவது மகனாகப் பிறந்தார் கலாம். ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் என்பதன் சுருக்கமே ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் என்றாகியது. மீனவ தொழில் புரிந்த குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், சிறுவயதில் வறுமையின் பின்னணியில் வளர்ந்தவர்.
பள்ளி மாணவனாக இருக்கும்போதே குடும்ப வருமானத்திற்காகத் தினமும் செய்தித்தாள் விநியோகிக்கும் பணியினைச் செய்தார். பள்ளியில் சராசரி மாணவனாகவே மதிப்பெண்களை பெற்றார். இருந்த போதிலும் கற்றுக்கொள்வதில் ஈடுபாடும் கணக்குப் பாடத்தில் ஆர்வமும் உடையவராக திகழ்ந்தார். இராமேஸ்வரத்தில் தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் பயின்ற கலாம், திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். பிறகு, சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் 1955-ல் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்து முதுகலை பட்டம் பெற்றார். சிறுவயதில் இருந்தே கலாம் அவர்களிடம் விமானியாக வேண்டும் என்கிற ஆசையும் இருந்தது. அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்து படித்தார்.
கலாம் பல புகழ்மிக்க முனைவர் பட்டங்கள் பெற்றிருந்தாலும் முறையான படிப்பை, எம்.ஐ.டி சென்னையில் படித்த முதுகலை பட்ட படிப்பைக் கொண்டு முடித்தார். தனது படிப்பினை முடித்த பிறகு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) விண்வெளி பொறியாளராகப் பணியாற்றத் தொடங்கினார் கலாம்.
1960-ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் விஞ்ஞானியாக ஆராய்ச்சியை தொடங்கிய அப்துல் கலாமின் பயணமானது, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கூடமான இஸ்ரோ, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், அரசின் ஆலோசகர் என எல்லைகள் இன்றி தொடர்ந்தது. அவரது சிறப்பான பங்களிப்புக்காக பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதும் வழங்கி இந்திய அரசு கவுரவப்படுத்தியது. அதோடு மட்டுமின்றி நாட்டின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை அலங்கரித்தவர்.
உயர் பதவிகளில் இருந்தபோதும் மாணவர்கள், இளைஞர்கள் இடையே கல்வி அறிவை வளர்ப்பதிலும், தன்னம்பிக்கையை விதைப்பதிலும் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர் கலாம். அதை மெய்பிக்கும் வகையில் கடந்த 2017-ல் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோதே அவரது உயிர் பிரிந்தது. நாட்டுக்காகவும், மாணவர்களுக்காகவும் உழைத்த டாக்டர் அப்துல்கலாமின் 92-வது பிறந்த தினம் இன்று (அக்.15). அப்துல் கலாமின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், 2010-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அவரது பிறந்தநாளை உலக மாணவர் தினம் என்று அறிவித்துள்ளது.
இந்த நாள் டாக்டர் கலாமின் பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், குறிப்பாக உலக இளைஞர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது, மாணவர்களுடனான டாக்டர் கலாமின் உரையாடல்கள் இந்திய எல்லையில் மட்டும் நின்றுவிடவில்லை. அவர் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வாழ்க்கையைத் தொடரத் தூண்டினார். பல்வேறு கல்வி நிறுவனங்களில் அவர் ஆற்றிய புகழ்பெற்ற உரைகள் எண்ணற்ற மாணவர்களின் இதயங்களிலும் மனங்களிலும் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியது.
டாக்டர் கலாமின் கல்வி, அறிவியல் மற்றும் மாணவர்கள் மீதான அவரது அன்பை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த தினமான அக்டோபர் 15-ஆம் தேதி ‘உலக மாணவர் தினம்’ ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது உலகின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மாணவர்கள் வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் நாள் இது.
கலாமின் வாழ்க்கைப் பயணம், ஒரு சிறிய நகரத்திலிருந்து தொடங்கி குடியரசுத் தலைவர் அலுவலகம் வரை நீண்டு நெடிந்தது. அவரது இந்தப் பயணம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மாணவர்களை பெரிய கனவு காணவும், தங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்கவும் தூண்டுகிறது. அவருடைய வாழ்க்கைக் கதை கல்வியும் மன உறுதியும் திறக்கக்கூடிய சாத்தியக்கூறுகளுக்கு ஒரு சான்றாகும்.
டாக்டர் கலாம் கல்வியின் அவசியத்தை, இன்றியமையாமையை தீவிரமாக வாதிட்டவர். கல்வியின் மூலம் தேசத்தையும் உலகையும் மாற்றும் சக்தி இளைஞர்களிடம் இருப்பதாக அவர் நம்பினார். அவரது பிறந்தநாளில் உலக மாணவர் தினத்தை கொண்டாடுவது இளம் மனங்களை வளர்த்தெடுப்பதிலும் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பையும் நினைவூட்டுகிறது.
Readmore: வியாழனில் உயிர்கள் வாழ வாய்ப்புள்ளதா?. ஆய்வு செய்ய விண்கலத்தை ஏவிய நாசா!