fbpx

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் இன்று!…

உழைப்பால் உயர்ந்த வல்லவர்! ஊருக்கு உழைத்த உத்தமர்! நாட்டிற்கு வாழ்ந்த நல்லவர்! கருமைக்கு பெருமை சேர்த்த விருது நகரின் விருது படித்த கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் இன்று. இவரது வரலாறு குறித்த சிறப்பு தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

போற்றும் படிக்காத மேதை! அடுத்தவரை அரசனாக்கி ஆளவைத்து வரலாறு படைத்தும் வாடகை வீட்டிலேயே வாழ்ந்திட்ட ஏழை..! நாட்டு மக்களின் நலம் ஒன்றே அவருக்கு துணையானதால் இல்லறத்தை மறந்து வாழ்ந்த பிரம்மசாரி..!! குலக்கல்வியை அகற்றி மதிய உணவு திட்டம் கொண்டு வந்து படிப்பவர் எண்ணிக்கையை உயர்த்தி அறிவுக் கண்ணைத் திறந்தவர்..! மனிதருள்மாணிக்கமே பெருந்தலைவா… என் காமராஜரே உன் போல் உயர்ந்தவர். இனி யொருவர் பிறப்பாரோ? சட்டங்கள் கற்றதில்லை பட்டங்கள் பெற்றதில்லை!! திட்டங்கள் பலகோடி தந்துவிட்ட அறிவு பெட்டகமே!! கல்விக்கு முக்கியத்துவம் அளித்த கர்ம வீரரே! காலத்தை வென்ற காவியமாய் வாழும் தலைவரே! ஊர் போற்ற வாழ்ந்த தலைமையே ! ஏழை எளியோருக்கு உதவிய மேன்மையே! விருதுநகரில் உதித்த உதயமே ! மக்களை கவர்ந்த இதயமே! ஆட்சி அனுபவம் பெற்ற இமயமே ! அந்நியரை எதிர்த்து நின்று அவரே அகிம்சை முறையில் வென்றவரே! அதனால் தான் பெரும் தலைவர் ஆனார் காமராஜர், ஏழைகளின் தலைவர் என்று சொல்லிக்கொண்டே போகலாம் பெருந்தலைவர் காமராஜரின் பெருமைகளையும் சாதனைகளையும்.

காமராஜர் 1903ஆம் ஆண்டு இதே நாள் விருதுநகரில் பிறந்தார். 12 வயது வரை பள்ளிக்கு சென்ற அவர், தந்தை இறப்பிற்கு பிறகு தாய்க்கு உதவ துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு வேலை செய்தபோது 16 வயதில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். சுதந்திரத் தீ நாடெங்கும் பற்றி எரிந்த நேரத்தில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க அறிவிப்பின்பால் ஈர்க்கப்பட்டு போராட்டக் களம் பல கண்டார். சிறையும் சென்றார். எட்டாண்டுகள் சிறைவாசம் முடித்து வந்தவர் காங்கிரஸ் இயக்கத்தின் மாநிலத் தலைவரானார்.

1940 தொடங்கி 14 ஆண்டுகள் அப்பொறுப்பை வகித்த காமராஜர், 1954ஆம் ஆண்டு தமிழக முதல்வரானார். எட்டு பேரைக் கொண்ட சின்னஞ்சிறிய அமைச்சரவை கொண்டு இம்மாநிலத்தில் அவர் ஆற்றிய பணிகள் இன்றும் அவர் பெயர் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆழியாறு-பரம்பிக்குளம், மணிமுத்தாறு, வைகை என அணைக்கட்டுகள் பல கட்டிப் பாசன வசதி செய்து விவசாயம் செழிக்கச் செய்தார். என்எல்சி, ஐசிஎஃப் போன்றவற்றை கொண்டு தந்ததன் மூலம் தொழில்துறை வளர்ச்சிக்கும் வித்திட்டார். மாநிலம் முழுவதும் அவர் புதிய பள்ளிக்கூடங்களை கட்ட நடவடிக்கை எடுத்ததோடு, ஏற்கெனவே இருந்த பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அவற்றின் தரத்தை உயர்த்தவும் அரும்பாடுபட்டார். நாட்டின் தலைமைப் பொறுப்பிற்கு லால் பகதூர் சாஸ்திரி, அதன் பின்னர் இந்திரா காந்தி ஆகிய இருவரைக் கொண்டு வந்து கிங்மேக்கர் என்ற அடைமொழியைப் பெற்றவர் காமராஜர்.

காலமெல்லாம் கதர் அணிந்து மக்கள் பணி ஆற்றிய அந்த மாபெரும் தலைவர் 1975 ஆம் ஆண்டு தன்னை ஆட்கொண்ட தலைவனின் பிறந்த நாளையே தனது நினைவு நாளாக்கிச் சென்றார். இவரது மறைவுக்கு பிறகு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி காமராஜரை கவுரவித்தது. காலங்கள் கடந்தாலும், தலைமுறைகள் மாறினாலும் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பெருந்தலைவர் காமராஜர் என்பதே நிதர்சனம். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நாளை கல்வி வளர்ச்சி தினமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

https://www.maalaimalar.com/news/district/erode-news-celebration-of-education-development-day-485910

Kokila

Next Post

40 வயதை நெருங்கும் பெண்களே கவனம்!... உங்களுக்கான பதிவு இது!

Sat Jul 15 , 2023
40 வயதிலும் அவர்கள் உடலை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. அவ்வாறான ஒரு சில அத்தியாவசிய சப்ளிமெண்ட்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக நம் வயதிற்கு ஏற்ற உணவை சாப்பிட்டு வந்தால் மட்டுமே, நமது உடல் ஆரோக்கியத்தை நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு செய்ய தவறும் பொழுது தான் ஏராளமான நோய்களுக்கு ஆளாகிறோம். குறிப்பாக பெண்களுக்கு வயதாகும் பொழுது அவர்கள் உடலில் பல்வேறு விதமான மாற்றங்கள் நடைபெறுகிறது. […]

You May Like