1948-ம் ஆண்டு இதே நாளில் டெல்லியில் உள்ள மிகப்பெரிய மாளிகையான பிர்லா ஹவுசில் நாதுராம் விநாயக் கோட்சே என்பவரால் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.. ‘பாபு’ என்று அன்புடன் அழைக்கப்படும் மகாத்மா காந்திக்கு அப்போது வயது 78.. கோட்சேவின் துப்பாக்கியில் இருந்து காந்தியின் மார்பிலும் வயிற்றிலும் மூன்று தோட்டாக்கள் பாய்ந்தது. சில நிமிடங்களில், காந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாதுராம் கோட்சே யார்..? நாதுராம் விநாயக் கோட்சே மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த ஒரு பிராமணர். அவர் ஒரு இந்து தேசியவாதி மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்தார். கோட்சே இந்து மகாசபை உறுப்பினராகவும் இருந்தார். கோட்சே ஒரு மகாராஷ்டிர பிராமண குடும்பத்தில் பிறந்தார். கோட்சேவின் தந்தை, விநாயக் வாமன்ராவ் கோட்சே, ஒரு தபால் ஊழியர், அவரது தாயார் லட்சுமி கோட்சே.
கோட்சே ஏன் மகாத்மா காந்தியைக் கொன்றார்..? நாதுராம் கோட்சே காந்தியை கொன்றதை ஒருபோதும் மறுக்கவில்லை.. மாறாக அவர் தனது நோக்கங்களை விளக்கி நீண்ட அறிக்கைகளை வெளியிட்டார். தான் மகாத்மா காந்தியை வெறுக்கவில்லை, ஆனால் அவரைக் கொன்றதன் மூலம் தனது ‘தார்மீக கடமையை’ செய்ததாக அவர் கூறினார்.

காந்தியை கொன்றதற்கு கோட்சே சொன்ன காரணங்கள் என்னென்ன..?
- மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானில் சிறுபான்மையினர் (இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள்) கொல்லப்படுவதைத் தடுக்க காந்தியும் இந்திய அரசாங்கமும் செயல்பட்டிருந்தால், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாக ஏற்பட்ட படுகொலைகள் மற்றும் துன்பங்களைத் தவிர்த்திருக்கலாம் என்று கோட்சே கருதினார்.
- வன்முறைகள், அட்டூழியங்களுக்கு காந்தி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கோட்சே கூறினார்..
- காஷ்மீரில் நடந்த போரின் காரணமாக பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட இறுதித் தொகையை வழங்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க காந்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகு இந்திய அரசு தனது கொள்கை முடிவை மாற்றிக்கொண்டதாக கோட்சே கூறினார்.
- ஒரு தேசமாக இந்தியா தனது சொந்த நலன்களைக் கவனிக்கத் தொடங்கும் வகையில் காந்தியை அரசியல் மேடையில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோட்சே கூறினார்.
- கோட்சேவின் கூற்றுப்படி, மத சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சை குறித்த மகாத்மா காந்தியின் நிலைப்பாடு, லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
- பாகிஸ்தானை முஸ்லீம்களுக்கு இந்தியா விட்டுக்கொடுக்க ஏற்கனவே காரணமாக இருந்தது. தடுத்து நிறுத்தாவிட்டால் காந்தி இந்துக்களுக்கு அழிவையும் மேலும் படுகொலைகளையும் கொண்டு வருவார் என்று கோட்சே நம்பினார்.
மகாத்மா காந்தி எப்படி கொல்லப்பட்டார்..?
மகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 அன்று மாலை 5 மணியளவில் பிர்லா ஹவுஸின் பின்புறம் இருந்த புல்வெளியில் இருந்தார். தினமும் மாலையில் பல சமய பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்த இடம் அது. காந்தி மேடையை நோக்கி நடக்கத் தொடங்கியபோது, காந்தியின் பாதையில் இருந்த கூட்டத்திலிருந்து கோட்சே வெளியேறி அவரை துப்பாக்கியால் சுட்டார்.. உடனடியாக தரையில் விழுந்த காந்தி, பிர்லா ஹவுஸில் உள்ள அவரது அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரம் கழித்து, மகாத்மா காந்தியின் மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது..

மகாத்மா காந்தி கொலை வழக்கு : கோட்சேவை அங்கிருந்தவர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.. காந்தி கொலை வழக்கு, 1948-ம் ஆண்டு மே மாதம் டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் கோட்சே மற்றும் மேலும் 6 துணைக் குற்றவாளிகள் ஆகியோருடன் தொடங்கியது. 1949-ம் ஆண்டு நவம்பர் 8, அன்று கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1945-ம் ஆண்டு நவம்பர் 15, அன்று அம்பாலா சிறையில் கோட்சே மற்றும் ஆப்தே தூக்கிலிடப்பட்டனர்.