சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் உருவாகிறது. இது, நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும்போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இந்த நிலையில், பூமியின் சில பகுதிகள் இருண்டு காணப்படும். ஆனால், நிலவின் அளவு சூரியனை முழுமையாக மறைக்கும் அளவுக்கு பெரியதாக இல்லாததால், நிலவின் விளிம்புகள் மட்டும் சூரியனை மறைத்து, வெளிப்புறமாக ஒரு நெருப்பு வளையம் போன்ற தோற்றம் ஏற்படும்.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (மார்ச் 29) நிகழ உள்ளது. இது ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும், அதாவது, சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே மூடும். கிரகணம் பிற்பகல் 2:20 மணிக்கு (IST) தொடங்கி மாலை 6:13 மணிக்கு முடியும். அதற்குள், மாலை 4:17 மணிக்கு இது உச்சத்தை அடையும் என்று நாசா தெரிவித்துள்ளது.
இந்த கிரகணம் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், வட மற்றும் தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். ஆனால், இந்தியாவில் இருந்து காண முடியாது.
சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம், ஆனால் சூரிய கிரகணத்தைக் கண்களால் நேரடியாக பார்க்கக்கூடாது. இது விழித்திரை தீக்காயங்கள் மற்றும் மீளமுடியாத கண் சேதத்தை ஏற்படுத்தும். சூரிய கிரகணத்தைக் பார்க்கும் போது, பாதுகாப்பான பார்வை உபகரணங்களை பயன்படுத்துவது அவசியம்.
நாசாவின் கணிப்பின்படி, 2025ஆம் ஆண்டு இரண்டு சூரிய கிரகணங்கள் நிகழ உள்ளன. முதலில் இன்று (மார்ச் 29) மற்றும் இரண்டாவது செப்டம்பர் 21ஆம் தேதி நிகழும். இதேபோல், இந்த ஆண்டில் இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழும். முதலாம் சந்திர கிரகணம் மார்ச் 14ஆம் தேதி ஹோலி பண்டிகை நாளில் நிகழ்ந்தது, இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 7, 2025 அன்று நடைபெறும்.