இன்று செப்டம்பர் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை புரட்டாசி மாத பௌர்ணமி. இந்த பௌர்ணமி தான் நடப்பாண்டின் கடைசி சூப்பர் மூன். இந்த சூப்பர் முன் அறுவடைக் காலத்தில் தோன்றுவதால் அறுவடை நிலவு என்றும் அழைக்கப்படுகிறது. பூமியின் நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் நிலா, ஒரு புள்ளியில் பூமிக்கு அருகிலும், மற்றொரு புள்ளியில் தூரத்திலும் சுற்றி வரும்.
அப்போது, பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது, முழுநிலவாக தெரியும் நிகழ்வு தான் சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது. இது மற்ற நேரங்களை விட, சற்று 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தெரியும். ஆண்டுதோறும் 3 அல்லது 4 சூப்பர் மூன்கள் தோன்றுகிறது. அதன்படி, இந்தாண்டும் 4 சூப்பர் மூன்கள். அதில், மூன்று சூப்பர் மூன்கள் இந்தியாவில் தெரிந்த நிலையில், இன்று மாலை தோன்றும் நிலவும் 4-வது சூப்பர் நிலவான அறுவடை நிலவு.
இந்த நிலா வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் இருந்து பார்க்கலாம். இலையுதிர் காலத்தின் போது, தோன்றும் இந்த நிலவு முழு நிலவு. பூமியிலிருந்து சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள கோணம் 180 டிகிரிக்கு சமமாக இருக்கும் போது ஏற்படுகிறது. இந்த அறுவடை நிலவு ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் தெரியும். விவசாயிகள் கோடையில் பயிரிடப்பட்ட தங்கள் பயிர்களை அறுவடை செய்யும் போது, மாலை நேரங்களில் கூடுதல் நிலவொளியைக் கொட்டி கொடுக்கின்றன. இதனால் தான் இதனை அறுவடை நிலவு எனக் கொண்டாடுகின்றனர் விவசாயிகள்.