சுமார் 40 ஆண்டுகளாக எண்ணூர் எர்ணாவூர் பகுதியில் இயங்கி வந்த 450 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் கடந்த 2017இல் செயல்பாட்டை நிறுத்தியது. அதை 660 மெகாவாட் திறன் கொண்ட வகையில், விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம், டிசம்பர் 20ஆம் தேதியான இன்று நடைபெறவுள்ளது. ஆனால், இந்த திட்டத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எண்ணூரைச் சேர்ந்த வனிதா என்பவர் கூறுகையில், ”மூச்சுவிட முடியாமல் தமது 3 குழந்தைகளும் ஏற்கனவே திணறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் அனல்மின் நிலையம் வந்தால் இதை வாழவே தகுதியற்ற பகுதி என அறிவித்துவிட வேண்டியதுதான் என தெரிவித்துள்ளனர். நான் என் குழந்தைகளை தெருக்களிலோ, ஆற்றங்கரையிலோ விளையாட அனுமதிப்பதில்லை. ஆற்றுக்கு மீன்பிடிக்கச் சென்று வரும் என் கணவரின் கால்களின் படிந்திருக்கும் சாம்பல் கழிவு எவ்வளவு கழுவினாலும் போகவில்லை. அனல்மின் நிலையத்தில் இருந்து வெளிவரும் புகையால் மூக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை.
அங்கிருந்து புகை வெளியாகும் போதெல்லாம், வீட்டின் கதவு, ஜன்னல் என அனைத்தையும் பூட்டிவிட்டு வீட்டிற்குள் இருப்போம். இப்படிப்பட்ட சூழலில் வாழும் நாங்கள் எப்படி இதே விளைவுகளை இன்னும் கூடுதலாக அளிக்க வல்ல மற்றுமொரு திட்டத்தை அனுமதிப்போம்” என்கிறார் வனிதா.
கடந்த 13ஆம் தேதி இந்தியன் அகாடெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் என்ற குழந்தை நல மருத்துவர்கள் கூட்டமைப்பின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் குழந்தைநலம் என்ற பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனல்மின் நிலைய திட்டங்களுக்கான வல்லுநர் குழுவுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தனர். அந்தக் கடிதத்தல், தீவிர காற்று மாசுபாட்டால் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, மாசுபாடுகளின் மையமாகத் திகழும் பகுதிகளில் வாழும் குழந்தைகள், இதன் விளைவுகளை அதிகம் எதிர்கொள்கின்றனர்.
எண்ணூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இருப்பதால், காற்று ஏற்கனவே அதிக அளவில் மாசுபட்டுள்ளது. தற்போது அனல் மின் நிலையத்தை விரிவாக்கினால் காற்று மாசுபாட்டை அது மேலும் தீவிரப்படுத்தும். எனவே, எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது” என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மின்சாரத் தேவை என்பது தவிர்க்க முடியாதவை என்றாலும், அதன் உற்பத்தி வழிமுறைகளை காற்று, சூரிய மின்சாரம் போன்ற பாதுகாப்பான அணுகுமுறைகளில் உற்பத்தி செய்வதே காலநிலை நெருக்கடியின் விளைவுகளைக் குறைக்க உதவும் குழந்தைநல மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் மருத்துவர் டி.எம்.ஆனந்தகேசவன் தெரிவித்துள்ளார்.