சமையலுக்கு முக்கிய பங்கு வகிப்பதே காய்கறி தான். பொதுமக்கள் காய்கறிகளை விட தக்காளி, வெங்காயத்தை தான் அதிகளவு சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில், வெங்காயத்தின் விலை பல மடங்கு உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வெங்காயத்தை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டு பின்னர், நீக்கப்பட்டதன் எதிரொலியாக பல டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், தற்போது தொடர் மழை பெய்து வருவதால், வெங்காய விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் கடந்த வாரம் ரூ.60 – ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.120 வரை விற்பனையாகிறது.
இதற்கிடையே, சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் தக்காளி கடந்த வாரம் கிலோ 25 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால், தற்போது தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, மொத்த காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.60-க்கு விற்பனையாகிறது. சில்லரை வர்த்தகத்தில் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் ரூ.80 வரையும், சின்ன வெங்காயம் ரூ.60 வரையும், தக்காளி கிலோ ரூ.60 வரையும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கேரட் ஒரு கிலோ ரூ.50-க்கும், முட்டைக்கோஸ் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.200-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.120-க்கும் விற்பனையாகிறது.