ஆடிப்பெருக்கை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு அல்லது ஆடி 18 என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.. காவிரி ஆறு ஓடும் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், கோவில்களுக்கு சென்றும், நீர்நிலைகளுக்கு சென்றும் வழிபாடு நடத்துவர். பொதுவாக ஆடிப்பெருக்கு நாளில் காவிரி பெருக்கெடுத்து ஓடுவது போல, வாழ்விலும் சந்தோஷம் பெருக வேண்டும் என்பதற்காக காவிரி தாயை மக்கள் வழிபடுவது வழக்கம். நாளைய புதுமணத் தம்பதிகள், பொதுமக்கள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெற காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்துவார்கள்..

இந்நிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. எனவே அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளைய விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 27-ம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்..