ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு புதிய தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு கூட தகுதிபெறாமல் படுதோல்வியடைந்தது பாகிஸ்தான் அணி. பொதுவாகவே பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங்கில் சொதப்புவது, கேட்ச்சுகளை நழுவ விடுவது, ரன் அவுட் வாய்ப்புகளை கோட்டை விடுவது என மோசமாக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் நிறைய கேட்ச் வாய்ப்புகள் மற்றும் பீல்டிங்கில் ரன்களை கட்டுப்படுத்தும் வாய்ப்புகளையும் கோட்டை விட்டனர். இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், கீழே விழுந்தால் அடிபட்டு விடும் என கீழே விழுந்து பீல்டிங் செய்யாமல் தவிர்ப்பது, ஓடுவதற்கு சோம்பேறித்தனப்பட்டு பந்தை பவுண்டரிக்கு விடுவது என மோசமாக செயல்படும் வீரர்களுக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்துள்ளார் முன்னாள் கேப்டனும், தற்போதைய தேர்வுக் குழு தலைவருமான முகமது ஹபீஸ். இனி எந்த வீரராவது பீல்டிங்கில் சொதப்பினால் 500 டாலர் (ரூ.41,500) அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட பள்ளிக்கூட சிறுவர்கள் போல செய்யும் தவறுக்கு அபராதம் விதிக்கப்படும் அளவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நிலைமை மாறியிருக்கிறது. இந்த விஷயத்தால் பாகிஸ்தான் வீரர்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.