ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ராயதுர்கம் நகரை சேர்ந்தவர் பிருத்வி (எ) குத்தீஷ் (30). இவர், உணவு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லலிதா (27). இதற்கிடையே, குத்தீசுக்கு அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு இளம்பெண் உடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளதால் குத்தீஷ், கள்ளக்காதலியை சந்திப்பதை குறைத்து கொண்டாராம். இதனால் அந்த பெண் தாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த ஆபாச புகைப்படங்கள் மற்றும் செல்போனில் பேசியதை வைத்து, உரையாடல்களை வைத்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து ராயதுர்கம் போலீசில் குத்தீஷ் சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார். இதையறிந்த அந்த பெண்ணும், குத்தீஷ் தனக்கு அடிக்கடி தொல்லை கொடுப்பதாக போலீசில் புகார் அளித்தார். இருவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து, இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இந்நிலையில், குத்தீசுக்கு போனில் தொடர்பு கொண்ட அந்த பெண், உன்னிடம் பேச வேண்டும். நீ உடனே என் வீட்டுக்கு வா என அழைத்துள்ளார். ஆனால், இதற்கு குத்தீஷ் மறுத்துள்ளார். அதற்கு அந்த பெண், நீ வீட்டுக்கு வராவிட்டால் உனது மனைவியிடம் நம்முடைய ஆபாசப் படங்களை காண்பிப்பேன் என மீண்டும் மிரட்டியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த குத்தீஷ், நடந்த சம்பவங்களை தனது மனைவி லலிதாவிடம் கூறிவிட்டு, உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள உரவகொண்டாவுக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு நேற்று அதிகாலை சென்றுள்ளார். ஆனால் குத்தீஷ் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி லலிதா, கணவரை பல்வேறு இடங்களில் தேடினார்.
இந்நிலையில், உரவகொண்டாவுக்கு செல்லும் வழியில் சாலையோர மரத்தில் ஆண் ஒருவர் தூக்கில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர் குத்தீஷ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் லலிதா புகார் செய்தார். ஆனால், போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த லலிதா, வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பெண் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையம் எதிரே தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.