தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் கீழ், காவல்துறையில் காலியாக உள்ள காவலர், சிறை வார்டன், தீயணைப்புவீரர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், தமிழக காவல் துறையில் 2-ம் நிலை ஆண், பெண் காவலர்களாக பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோல் சிறைத்துறையில் 2-ம் நிலை சிறை காவலர்கள் வேலைக்கும், தீயணைப்புத்துறையில் தீயணைப்பாளர் வேலைக்கும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காவல் துறையில் 2-ம் நிலை பெண் காவலர்கள் (மாவட்ட-மாநகர ஆயுதப்படை) 780 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
2-ம் நிலை ஆண் காவலர்கள் 1,819 பேர் தேர்வாக உள்ளனர். சிறைத்துறையில் 2-ம் நிலை சிறைக்காவலர் பதவிக்கு 3 பெண்கள் உள்பட 86 பேர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். தீயணைப்புத்துறையில் தீயணைப்பாளர் வேலைக்கு 674 ஆண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழக காவல்துறையில் 3,359 பேர் புதிதாக பல்வேறு பணிகளுக்கு தேர்வாக இருக்கிறார்கள். இதற்கு ‘ஆன்லைன்’ மூலம் வருகிற ஆகஸ்ட் 18-ந் தேதி முதல் விண்ணபிக்கலாம் . இணையவழி மூலம் விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 17-ந் தேதி ஆகும். இதற்கான எழுத்து தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான மோசடி லிங்கில் விண்ணப்பித்துவிடாதீர்கள்.
இந்த தேர்வில் கலந்துகொள்வதற்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயதாகவும், அதிகபட்சம் 26 வயதாகவும் இருக்க வேண்டும். (வயது உச்ச வரம்புகள் ஒவ்வொரு (பிசி, எம்பிசி, எஸ்சி மற்றும் எஸ்சி பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்)” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.