தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மேலஆத்துாரைச் சேர்ந்தவர் பழனிக்குமார் (30). இவர், கேரளாவில் இரும்பு கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், பழனிக்குமாருக்கும் துாத்துக்குடியைச் சேர்ந்த முத்துமாரி (21) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. புதிதாக திருமணமான ஜோடி, சம்பிரதாயங்களுக்குப் பிறகு, சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர். இதையடுத்து, இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வந்த நிலையில், மேல ஆத்தூரில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பில் உள்ள நீர்தேக்கத்திற்கு சென்றனர். அங்கு நீர்த்தேக்கப் பகுதியைப் பார்த்த ரசித்தனர். அப்போது, தனது செல்போனில் முத்துமாரி, நீர் தேக்கத்தின் அருகே நின்று கொண்டு செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார். முழு நீர்த்தேக்கமும் செல்ஃபியில் பதிவு செய்வதற்காக அப்படியே பின்னால் சென்ற நிலையில், கால் தவறி நீர்த்தேக்கத்தில் விழுந்துள்ளார்.
தனது கண்முன்னே புதுப்பொண்டாட்டி நீர்த்தேக்கத்தில் விழுந்ததைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த பழனிக்குமார், மனைவியைக் காப்பாற்ற முயன்றதில், அவரும் நீரில் மூழ்கினார். இருவரும் மூச்சுத் திணறி இறந்தனர். சுற்றுலா சென்ற ஜோடி திரும்பி வராத நிலையில், இவர்களைக் காணாமல் இருவரது குடும்பத்தினரும் தேடிய நிலையில், நீர்த்தேக்கத்தில் விழுந்தது தெரியவந்தது. பின்னர் இருவரது உடல்களும் மீட்கப்பட்டன. திருமணமான 3-வது நாளிலேயே நீரில் மூழ்கி இளம் தம்பதியர் இறந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட சப் – கலெக்டர் கவுரவ்குமார் விசாரித்து வருகிறார்.