Annamalai: டிஆர் பாலுவின் மனைவி சொத்து மதிப்பு 450% உயர்ந்துள்ளது. இதேபோல், தனது சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயாராக உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
இந்தாண்டு மக்களவை தேர்தலில் பாஜக நேரடியாக 19 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதே பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி இருந்தது. அதாவது அவரது வேட்புமனுவில் பிழை இருந்ததாகவும் அதையும் தாண்டி வேட்புமனுவை ஏற்றதாக அதிமுக, நாதக குற்றஞ்சாட்டினர். இருப்பினும், அவர் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்ததாகவும் அதில் தவறாக இருந்த மனு நிராகரிக்கப்பட்டு, சரியான மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக விளக்கம் தரப்பட்டது.
இந்தச் சூழலில் அண்ணாமலை குறித்து மற்றொரு சர்ச்சை கிளம்பியது. கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிட்ட நிலையில், மூன்று ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 117% உயர்ந்ததாகத் தகவல்கள் பரவின. இந்தச் சூழலில் இது தொடர்பாகக் கடலூரில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது, நான் எனது வேட்புமனுவில் எல்லா விவரங்களையும் சொல்லி இருக்கிறேன். எனது சொத்து விவரங்கள் அதில் கூறப்பட்டுள்ளது. திமுக அரசு என் மீது பதிவு செய்துள்ள வழக்கு குறித்த தகவல்களும் அதில் உள்ளது. அதில் என்ன தவறான தகவல் என்று சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை.
எனது சொத்து 117% உயர்ந்து இருக்கிறது என்பதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன். 11% தான் உயர்ந்து இருக்கிறது. வாட்ஸ்அப் செய்திகளை மட்டும் நம்பக் கூடாது. சராசரியாக ஒரு நபருக்கு அவர் என்ன சொத்து வைத்து இருந்தாலும் சொத்து மதிப்பு 4 முதல் 6% வரை உயரும். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது எனது சொந்த பணத்தில் நிலம் ஒன்றை வாங்கி இருந்தேன். அந்த சொத்து என்பது சராசரியாக 4 முதல் 6% வரை உயரும். 3 ஆண்டுகள் என்றால் அது 18% வரை உயர்ந்து இருக்கும்.
டிஆர் பாலுவின் மனைவி சொத்து மதிப்பு 450% உயர்ந்து இருக்கிறது. நான் இங்கே மாற்று அரசியலை முன்வைக்க வந்துள்ளேன். பொய் பிரச்சாரம் செய்ய வரவில்லை. நான் போட்டியிடும் கோவையில் வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட தர மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். யார் வேண்டுமானாலும் என் பிரச்சாரத்தை செக் செய்யலாம். நான் பணம் கொடுத்தால் அதை நிரூபிக்கலாம் என்பதைச் சவாலாகவே விடுத்துள்ளேன். வேறு எந்த அரசியல் கட்சியாவது இப்படி சவால் விடுமா.. இந்த நேர்மையான அரசியலைத் தான் நான் முன்னெடுக்கிறேன். இதற்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
Readmore: நரேந்திர மோடி 3-வது முறை பிரதமராவதை தடுக்க முடியாது…! முதல்வர் ஸ்டாலினுக்கு வானதி பதில்…!