செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கீழக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கபாலி மகன் கார்த்திக் (21). இவர், மறைமலைநகர் பகுதியில் உள்ள பேட்டரி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இதே நிறுவனத்தில் கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (22) என்பவர் பணிபுரிந்து வந்தார். லோகேஷ், கார்த்திக்கின் உறவினர் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறி நாளடைவில் அது ஓரினச்சேர்க்கை வரை சென்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கார்த்திக் குடும்பத்திற்கு இவர்களின் பழக்கம் தெரிந்துள்ளது.
இதையடுத்து, லோகேஷ் வீட்டை காலி செய்துவிட்டு சிங்கபெருமாள் கோவிலில் வாடகைக்கு சென்று உள்ளார். கார்த்திக்கிற்கு லோகேஷை பிரிய மனம் இல்லாததால் அவருடனேயே வீட்டில் தங்கி கணவன்-மனைவி போல வாழ்ந்தாக கூறப்படுகிறது. கார்த்திக்கின் பெற்றோர் பலமுறை வீட்டிற்கு அழைத்தும் கார்த்திக் பிடிவாதமாக இருந்துள்ளார். இதற்கிடையே, கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்த கார்த்திக் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் லோகேஷ் மட்டும் வேலைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் கார்த்திக் இல்லாததால் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் அவர்கள் ஒன்றாக சென்ற இடங்களில் தேடி பார்த்துள்ளார்.
அப்போது, பாழடைந்த கிணற்றின் கரை மீது கார்த்திக் செருப்பு இருந்ததை கண்டு மறைமலைநகர் காவல் நிலையம் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். நீண்ட நேர தேடுதலுக்கு பின் கிணற்றில் இறந்த நிலையில், கார்த்தியின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மறைமலைநகர் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.