சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஐவேலி ஊராட்சி ஸ்ரீ வாணி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (27) எலெக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் சேலம் ஏத்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு வருகின்ற மே 25ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், விக்னேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சங்ககிரி குப்தா காலனியில் புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை பார்க்க சென்ற போது வீட்டின் உரிமையாளரான அஸ்மா என்ற திருநங்கைக்கும் விக்னேஷுக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இருவரும் சேர்ந்து எடுத்துகொண்ட புகைப்படத்தை மணப்பெண் பிரியதர்ஷினிக்கு திருநங்கை அஸ்மா அனுப்பி வைத்துள்ளார். விக்னேஷ் தனது கணவர் என்றும், நீ எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என மணப்பெண்ணிடம் மிரட்டியுள்ளார். இதனால் மணப்பெண்ணின் பெற்றோர்கள், மணமகனின் வீட்டிற்கு வந்து இதைப் பற்றி விசாரித்து திருமணத்தை நிறுத்த பேசிகொண்டிருந்தனர்.
அப்போது, திருநங்கை அஸ்மா தனது தோழிகளுடன் விக்னேஷின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். அத்துடன், விக்னேஷின் பெற்றோரை மாமனார், மாமியார் எனவும் மற்றவர்களை உறவு வைத்து அழைத்துள்ளார். அப்போது வெளியே சென்றிருந்த விக்னேஷ் வீட்டிற்கு வந்த உடன் நடைபெற்ற சம்பவங்களை அறிந்து மனமுடைந்து தனது தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாளை திருமணம் நடைபெறவுள்ள நிலையில் திருநங்கையின் தகாத உறவால், மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.