Harvard University: வெள்ளை மாளிகை முன்வைத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த காரணத்தால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட இருந்த சுமார் 2.3 பில்லியன் டாலர் நிதியை அதிபர் டிரம்ப் நிர்வாகம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
அமெரிக்க கல்வி துறையின் ஆண்டி-செமிட்டிசம் எதிர்ப்பு பணிக்குழு வெளியிட்ட தகவலின்படி, 2.2 பில்லியன் டாலர் மானியங்களும், 60 மில்லியன் டாலர் கூட்டாட்சி ஒப்பந்தங்களும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், “ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அரசின் கோரிக்கைகளை ஏற்க மறுத்திருப்பது — இது, எங்கள் நாட்டின் மிகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் வேரூன்றியுள்ள ஒரு கவலைக்கிடமான ‘அதிகார ஆணவ மனப்பாங்கை’யை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
கல்வி துறையின் அறிக்கை, ஹார்வர்ட் பல்கலைக்கழக தலைவர் ஆலன் கார்பர் பல்கலைக்கழக சமூகத்திற்கு கடிதம் எழுதிய பிற சில மணி நேரங்களில் வெளியானது. அந்த கடிதத்தில் அவர் டிரம்பின் கோரிக்கைகளைத் தள்ளுபடி செய்து, பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்தை பாதுகாத்தும், ஆட்சித் தரப்பின் மீறல்களை குற்றம் சாட்டியும் கூறியிருந்தார். “பல்கலைக்கழகம் அதன் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காது அல்லது அதன் அரசியலமைப்பு உரிமைகளை விட்டுக்கொடுக்காது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், எந்த அரசாங்கமும் தனியார் பல்கலைக்கழகங்கள் என்ன கற்பிக்கலாம், யாரை சேர்க்கலாம் மற்றும் பணியமர்த்தலாம், எந்தப் படிப்பு மற்றும் விசாரணைத் துறைகளைத் தொடரலாம் என்று ஆணையிடக்கூடாது” என்று கார்பர் குறிப்பிட்டிருந்தார்.
நிர்வாகத்தின் கோரிக்கைகள் முதல் திருத்தத்தை மீறுவதாகவும், இனம், நிறம் அல்லது தேசிய வம்சாவளியை அடிப்படையாகக் கொண்ட பாகுபாட்டைத் தடுக்கும் ஒரு சிவில் உரிமைகள் சட்டமான தலைப்பு VI இன் கீழ் கூட்டாட்சி அரசாங்கத்தின் அதிகாரத்தை மீறுவதாகவும் கார்பர் வாதிட்டார். “ஹார்வர்டில் கற்பித்தல் மற்றும் கற்றலைக் கட்டுப்படுத்த, சட்டத்திலிருந்து விலக்கப்பட்ட அதிகாரத்தை வலியுறுத்துவதன் மூலம் இந்த இலக்குகளை அடைய முடியாது,” என்று அவர் மேலும் கூறினார். “நமது குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பணி… ஒரு சமூகமாக வரையறுத்து மேற்கொள்வது நமது கடமை.” அதற்குப் பிறகு சில மணி நேரங்களில், அரசு ஹார்வர்டுக்குக் கிடைக்கும் பில்லியன் கணக்கான கூட்டாட்சி நிதியை முடக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது,
அதிபர் டிரம்ப், வெள்ளிக்கிழமை ஹார்வர்டுக்கு எழுதிய கடிதத்தில், பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திலும் தலைமைப்பதவிகளிலும் பரந்த மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், சேர்க்கை விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் கடிதத்தில், ஹார்வர்ட் தனது பல்வகைமை முயற்சிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், சில மாணவர் கிளப்புகளுக்கான அங்கீகாரத்தை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பல்கலைக்கழகம் இந்தக் கோரிக்கைகளை ஏற்கத் தவறினால், சுமார் 9 பில்லியன் டாலர் மதிப்பிலான மானியங்களும் ஒப்பந்தங்களும் அபாயத்தில் உள்ளன என்று கூட்டாட்சி அரசு எச்சரித்தது.
கூட்டாட்சி அழுத்தத்தை எதிர்கொள்ளும் பல உயரடுக்கு நிறுவனங்களில் ஹார்வர்டும் ஒன்றாகும். இதேபோன்ற கருத்து வேறுபாடுகள் காரணமாக பென்சில்வேனியா, பிரவுன் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு கல்வித் துறையும் நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளது. அண்மையில், பல பில்லியன் டாலர் நிதி துண்டிக்கப்படும் என்ற அச்சுறுத்தலுக்கு பிறகு, கொலம்பியா பல்கலைக்கழகம் தனது கொள்கைகளில் மாற்றங்களை செய்ததற்கான சூழலை, இப்போது பயன்படுத்தப்படும் இந்த உத்திகள் பிரதிபலிக்கின்றன.
கார்பர் மேலும் கூறுகையில், பல்கலைக்கழகம் “யூத விரோதத்தை சமாளிக்க விரிவான மாற்றங்களை எடுத்துள்ளது” என்று ஒப்புக்கொண்டாலும், அந்த மாற்றங்கள் ஹார்வர்டின் நிபந்தனைகளின்படி செய்யப்பட வேண்டும் என்றும், “அரசு கட்டளையினால்” அல்ல என்று வலியுறுத்தினார்.