நடிகர் நிதின் சவுகான் தற்கொலை செய்து கொண்டதாக அவருடன் நடித்த விபுதி தாக்குர் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் நகரை சேர்ந்தவர் நிதின் சவுகான். இவருக்கு வயது 35 ஆகிறது. மும்பை நகரில் வசித்து வந்த இவர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். தாதாகிரி 2 என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். எம்.டி.வி.யின் ஸ்பிளிட்ஸ்வில்லா 5 நிகழ்ச்சியில் தோன்றியிருக்கிறார்.
ஜிந்தகி டாட் காம், கிரைம் பேட்ரல் மற்றும் பிரெண்ட்ஸ் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். அவர் கடைசியாக எஸ்.ஏ.பி. டி.வி.யின் தேரா யார் ஹூன் மெயின் என்ற தொடரில் நடித்திருந்தார். இந்நிலையில், நிதின் சவுகான் திடீரென உயிரிழந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அவர் உயிரிழந்ததாக, அவருடன் நடித்தவர்களான சுதீப் சாஹிர் மற்றும் சயந்தனி கோஷ் இருவரும் உறுதி செய்துள்ளனர். எனினும், வேறு விவரங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்றும் தெரிவித்தனர். நிதினுடன் ஒன்றாக நடித்தவரான விபுதி தாக்குர், அவருடைய சமூக ஊடக பதிவில், நிதின் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.