2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது தான் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த அக்டோபர் கட்சி மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திய விஜய் தனது கொள்கைகளையும், கொள்கை தலைவர்களையும் அறிவித்தார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிக்கப்படும் என்று அறிவித்தார்.
அப்போது திமுகவை கடுமையாக சாடிய விஜய், பாஜகவையும் மேம்போக்காக விமர்சித்தார். ஆனால் அதிமுகவை பற்றி எதுவுமே பேசவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக கூட்டணி யாருடன் அமைத்துக்கொள்ளும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் முதல் கட்சியாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கூட்டணியில் இணையும் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்புக்குப்பின், தமிழநாடு முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் முஸ்தபா செய்தியாளர்களிடம் பேசுகையில், “அற்ப செயல்களில் ஈடுபடுவதை திமுக நிறுத்திக்கொள்வது நல்லது. தவெகவுக்கு எதிராக இஸ்லாமியர்களை திசை திருப்பும் திமுகவின் சித்து விளையாட்டு எடுபடாது.
சிஏஏ சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என கூறி இஸ்லாமியர்களின் பக்கம் நின்றவர் விஜய். தவெகவில் இஸ்லாமியர்களுக்கு அங்கீகாரம் அளித்து வருகிறார் விஜய். இஸ்லாமியர்களுக்கு தவெக அங்கீகாரம் கொடுக்கவில்லை என பொய் செய்தியை பரப்பி வருகின்றனர். வாக்கு வங்கிக்காக சிலர் மூலம் இஸ்லாமியர்களை திசை திருப்ப திமுக சதி செய்கிறது.” எனத் தெரிவித்தார்.
Read more : முட்டை vs பனீர் : எடை இழப்புக்கு ஆரோக்கியமான புரதம் எது..?