அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய உரையாற்றிய விஜய் திமுக மீண்டும் கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர் “ அம்பேத்கரை பற்றி யோசிக்கும் போது சட்டம் ஒழுங்கு, சமூக நீதியை பற்றி நம்மால் யோசிக்காமல் இருக்க முடியாது. மணிப்பூரில் நடப்பது நமக்கு தெரியும். அதை பற்றி கொஞ்சம் கூட கண்டுக்காமல் மத்தியில் ஒரு அரசு ஆட்சி செய்கிறது. ஆனால் இங்குள்ள அரசு எப்படி இருக்கு?
தமிழ்நாட்டில் வேங்கைவயல் கிராமத்தில் என்ன நடந்தது என்று நம் அனைவருக்கும் தெரியும். சமூக நீதியை பேசும் இங்கிருக்கும் அரசு அதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரியே தெரியவில்லை. இதெல்லாம் இன்று அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்.
பெண் குழந்தைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, மனித உயிர்களுக்கு எதிராக பல பிரச்சனைகள் நடக்கிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு தான். மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒரு நல்ல அரசு தேவை. இதை அமைத்துவிட்டாலே போதும். தினமும் நடக்கும் பிரச்சனைகளுக்கு சம்பிரதயாத்திற்காக ட்வீட் போடுவது, சம்பிரதாயத்திற்காக அறிக்கை விடுவதும், சம்பிரதாயத்திற்காக மழை நீரில் நின்று போட்டோ எடுப்பது. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஆனால் நாமும் சம்பிரதாயத்திற்காக அவ்வாறு செய்ய வேண்டி உள்ளது.
மக்களின் உரிமைகளுக்காக, மக்களின் உணர்வுகளுக்காக தான் நான் எப்போதும் இருப்பேன். மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனசாக்கி விடுவார்கள்.” என்று தெரிவித்தார்.