ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் கடந்த மார்ச் 12ஆம் தேதி முதல் கடைபிடித்து வந்தனர். 30 நாட்கள் நோன்பின் இறுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். ரமலான் மாதத்தின் முதல் பிறையின் அடிப்படையில் நோன்பு அறிவிப்பு வெளியிடப்படும். அதேபோல் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய மக்கள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில், “புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.