தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.சாலை எனும் கிராமத்தில் நடைபெறவுள்ளது. இன்னும் மூன்று நாட்களே கால அவகாசம் இருப்பதால் இரவு பகலாக மாநாடு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கும் 90 சதவீதம் பணி நிறைவு பெற்ற நிலையில், மீதமுள்ள பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாநாட்டுக்கு விளம்பரம் செய்யும் வகையில் விக்கிரவாண்டி அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன. மாநாட்டு திடல் பகுதியில் பெண்கள், ஆண்கள், மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் என தனித்தனியாக பார்ட்டிஷன் அமைக்கப்பட்டு, அந்த இடத்தில் 300 டாய்லெட்டுகள், 300 வாட்டர் டேங்க் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதேபோல் 50,000 இருக்கைகள் அமைக்கப்படும் இடங்களில் கிரீன் மேட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மாநாட்டு திடலை பார்ப்பதற்கும், வீடியோ எடுப்பதற்கும் வரும் 26ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டு திடல் மற்றும் பார்க்கிங் பகுதியில் அவசர மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள். மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் குழுவினர், கண்காணிப்பு குழுவினர், வரவேற்பு குழுவினர் என அனைவருக்கும் தனித் தனியாக ஒரே நிற சீருடை வழங்கப்பட இருக்கிறது.
முக்கியமாக, மாநாட்டின் ஏற்பாட்டில் சுமார் 50 அடி உயரத்தில் விஜய் மற்றும் 3 தலைவர்களின் கட் அவுட்டுகள் இடம்பெற்றுள்ளது. அதில் காமராசர், பெரியார், அம்பேத்கர் மற்றும் விஜய் கட் அவுட்டுகள் உள்ளன. பெரியார் கட் அவுட் வைத்ததை பார்க்கும் போது, திராவிட கொள்கையையும் த.வெ.க. கட்சியின் முக்கிய கொள்கையாக இருப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் த.வெ.க கட்சியின் நிலைப்பாடு, அதன் கொள்கை மற்றும் அது பயணிக்கும் பாதையானது அதிகாரப்பூர்வமாக வரும் 27ஆம் தேதி மாநாட்டில் தெரியவரும்.