ஹீரோ விடா (Hero Vida) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஹீரோ விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அக்டோபர் 7-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த ஸ்கூட்டரின் வெளியீட்டு தேதி ஜூலை 1-ம் தேதி அறிவிக்கப்பட்டது. பின்னர் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த ஸ்கூட்டர் அடுத்த மாதம் 7-ம் தேதி அறிமுகமாக உள்ளது.. இது ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும். இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள், பாதுகாப்பு மற்றும் வரம்பில் அந்நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது. தைவான் சார்ந்த பேட்டரி நிறுவனமான கோகோரோ நிறுவனத்தின் எளிதில் மாற்றக்கூடிய பேட்டரி ஹீரோ விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளது.. ஹீரோ நிறுவனத்தின் சமீபத்திய இ-ஸ்கூட்டர் இந்தியாவின் சித்தூரில் உள்ள நிறுவனத்தின் பசுமை உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது, அதன்படி முன் மற்றும் பின் அலாய் வீல்களுடன் இது உருவாகி வருகிறது.. இதில் முன் சக்கரம் 12 இன்ச் மற்றும் பின் சக்கரம் 10 இன்ச் அலாய் வீலாக இருக்கும். மேலும் இதில், பெல்ட் டிரைவ் கொண்ட மின்சார மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஸ்கூட்டரில் என்ன சிறப்பம்சங்களை நிறுவனம் தருகிறது என்பது அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகும்.
டிவிஎஸ், ஓலா நிறுவனங்களுக்கு போட்டியாக ஹீரோவின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும் என்று கருதப்படுகிறது.. தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. ஓலா எலக்ட்ரிக் மற்றும் ஏதர் போன்ற பல நிறுவனங்கள் மற்றும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..