வங்கி மோசடி வழக்கில் இந்தியன் வங்கியின் ஆயிரம் வங்கி கிளையின் முன்னாள் தலைமை மேலாளர் பி. முத்தையா அதே கிளையின் முன்னாள் ஏஜிஎம் எம். அசிஸ், ஜெமினி பிக்சர்ஸ் சர்கியூட் நிறுவனத்தின் முன்னாள் இணை மேலாண்மை இயக்குநர் மனோகர் பிரசாத் ஆகியோருக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வங்கியில் பணிபுரிந்த முத்தையாவுக்கு ரூ. 70,000-மும், அசிஸ்-க்கு ரூ. 50,000-மும், மனோகர் பிரசாத்துக்கு ரூ. 90,000-மும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 9 லட்சமும், மயிலாப்பூர் ஆசியன் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 2 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கியில் ஏராளமானோருக்கு கடன் வழங்கி, அவர்கள் திருப்பிச் செலுத்தாததில் வங்கிக்கு ரூ. 8.35 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம். கோபாலகிருஷ்ணன், மண்டல மேலாளர் ஏ.வி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் மீது சிபிஐ 27.06.1998 அன்று வழக்குப் பதிவு செய்தது. இதில் 21.12.2001-ல் புலன் விசாரணைக்குப் பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.