கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இருசக்கர வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் வசிப்பவர் சுரேஷ் இவரது மகன் அர்னால்ட் என்பவரும் டி கீரனூர் கிராமத்தைச் சார்ந்த கோவிந்தன் என்பவரது மகன் சேக்குவாரன் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் சம்பவம் நடந்த தினத்தன்று தங்களது கிராமத்திலிருந்து கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு சென்று தங்களது வேலைகளை முடித்துவிட்டு ராமநத்தம் என்ற பகுதியை நோக்கி புறப்பட்டனர்.
வாகனத்தை அர்னால்டு ஓட்டி வந்தார். வாகனூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே இவர்களது பைக் வந்து கொண்டிருந்தபோது முன்னே சென்ற தனியார் பேருந்தை முந்தி செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை அதிவேகமாக செலுத்தினார் அர்னால்டு இதில் எதிர் திசையில் வந்த காரை அவர் கவனிக்கவில்லை. வேகமாகச் சென்ற பைக் எதிர்த்தசையில் வந்த காரின் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இதில் அர்னால்டு மற்றும் சேக்குவாரனும் பலத்த காயம் அடைந்தனர். அப்பகுதியிலிருந்த மக்கள் இவர்கள் இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கொண்டு செல்லும் வழியிலேயே அர்னால்டு பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சேக்குவாரன் வியாழக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.