உதயநிதி சனாதனம் சர்ச்சை குறித்து மனு மீது மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த 2023 செப்டம்பர் 2-ம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப் பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை’’ என்று பேசினார்.
இதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக உத்தர பிரதேசம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ஒன்றாக இணைக்க கோரி உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, உ.பி., பிகார், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் புதிதாக இணைந்துள்ள கேவியட் மற்றும் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்கவும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கார் தத்தா அமர்வு உத்தரவிட்டுள்ளது.