தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததோடு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழக துணை முதல்வராகவும் அங்கீகரித்து ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் சினிமா முதல் அரசியல் வரை அவர் கடந்து வந்த பாதை குறித்து இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
* 1977 நவம்பர் 27-ல் பிறந்த உதயநிதி சென்னை லயோலா கல்லூரில் பி.காம் பட்டப்படிப்பு முடித்தார்.
* அரசியல் குடும்பத்தில் பிறந்த உதயநிதி, ரெட்ஜெயண்ட் நிறுவனம் மூலம் தயாரிப்பாளராகவும், அதைத்தொடர்ந்து நடிகராகவும் அறிமுகமானார்.
* 2009-ல் வெளியான ஆதவன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் உதயநிதி.
* 2012-ல் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, மனிதன், இப்படை வெல்லும், நிமிர், சைகோ, நெஞ்சுக்கு நீதி, கழகத் தலைவர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் உதயநிதி நடித்திருக்கிறார்.
* 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ள உதயநிதி, விண்ணைத்தாண்டி வருவாயா, விக்ரம், கோப்ரா, லவ்டுடே உள்ளிட்ட திரைப்படங்களையும் விநியோகம் செய்துள்ளார்.
* 2016 ஆம் ஆண்டு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார்.
* முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு மெல்ல மெல்ல அரசியலுக்குள் நுழைந்தார்.
* திமுக நடத்திய போராட்டங்கள், கிராம சபை கூட்டங்களில் பங்கேற்ற உதயநிதி, 2019 மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தமிழகம் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
* 2019 ஜூலை 4 ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டார்.
* 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
* 2022 நவம்பர் 23 ஆம் தேதி திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
* 2022 டிசம்பர் 14-ல் திமுகவின் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார்.
* 2024 செப்டம்பரில், தமிழகத்தின் 3வது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.