சனாதனத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின், கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீது நடவடிக்கை கோரும் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வலதுசாரி வழக்கறிஞர்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால், நீதிபதிகள் இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். அதாவது மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்க வேண்டுமெனில், அது குறித்து முன்கூட்டியே நீதிமன்ற பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
பின்னர் பதிவாளர் ஒரு எண்ணை கொடுப்பார் இதை வைத்துதான் அவசர மனு குறித்த கோரிக்கையை எழுப்ப முடியும். இப்படி இருக்கையில், சில வழக்கறிஞர்கள் திடீரென தலைமை நீதிபதியின் முன்வந்து “சனாதனம் குறித்து அவதூறாக பேசிய உதயநிதி, பிரியங்க் கார்கே மீதான வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
இதை கேட்டு கோபமடைந்த தலைமை நீதிபதி, “எந்த வழக்காக இருந்தாலும் உரிய வழிமுறையை பின்பற்ற வேண்டும். வழக்கறிஞர்களே இப்படி ஒழுங்கீனமாக நடந்து கொள்ளலாமா?” என்று சரமாரியாக விளாசினார். மேலும், இந்த வழக்கை இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறினார். இதனையடுத்து, மீண்டும் திங்கட்கிழமை இதே கோரிக்கைகளை வலதுசாரி வழக்கறிஞர்கள் எழுப்ப இருக்கின்றனர்.