பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில் மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிட அனுமதி இல்லை என பல்கலைக்கழக மானியக் குழு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கையின் போது மேற்கூறிய ஆவணங்களை சரிபார்ப்பதற்காக, பல்கலைக்கழகங்கள் வழங்கும் தற்காலிக சான்றிதழ்கள் மற்றும் பட்டங்களில் முழு ஆதார் எண்களை அச்சிடுவது குறித்து மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன என்ற செய்தி வெளியான நிலையில் மத்திய உயர்கல்வி கட்டுப்பாட்டாளரிடம் இருந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளின்படி, ஆதார் எண்ணை வைத்திருக்கும் எந்த நிறுவனமும், கல்லூரிகளில் படிப்பை முடித்த மாணவர்களுக்கான பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில் மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு அனுமதி இல்லை என்று பல்கலைக்கழகங்களுக்கு எழுதிய கடிதத்தில் யுஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி தெரிவித்தார்.
பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில் ஆதார் எண்களை அச்சிடுவது அனுமதிக்கப்படாது. உயர்கல்வி நிறுவனங்கள் யுஐடிஏஐயின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், என்று அவர் கூறினார்.