ஆதார் அட்டையைப் புதுப்பிக்கும் நோக்கத்திற்காக மக்கள் தங்கள் அடையாள அல்லது முகவரி சான்று ஆவணங்களை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) எச்சரித்துள்ளது. தனிநபர்கள் தங்களுடைய ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு UIDAI ஒருபோதும் கேட்பதில்லை என்றும், இதுபோன்ற கோரிக்கைகள் மோசடியாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) “உங்கள் ஆதாரை மின்னஞ்சல் அல்லது Whatsapp மூலம் புதுப்பிக்க உங்கள் POI/POA ஆவணங்களைப் பகிருமாறு UIDAI ஒருபோதும் கேட்காது. உங்கள் ஆதாரை ஆன்லைனில் myAadhaarPortal மூலம் புதுப்பிக்கவும் அல்லது உங்களுக்கு அருகிலுள்ள ஆதார் மையங்களுக்குச் சென்று புதுப்பிக்கவும்” என்று கூறியுள்ளது.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Meity) கீழ் இயங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), மக்கள் தங்கள் ஆதார் அட்டைகளின் நகல்களை எந்தவொரு நிறுவனத்துடனும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தியது. ஏனென்றால், ஆதார் அட்டையில் தவறாகப் பயன்படுத்தக்கூடிய முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் உள்ளன. அதற்கு பதிலாக, ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டுமே பயன்படுத்தலாம்.
“ஆதார் அட்டையை அடையாளத்தை நிரூபிக்கவும், பரிவர்த்தனை செய்யவும் இலவசமாகப் பயன்படுத்த வேண்டும். ஆனால் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற பொதுத் தளங்களில் வைக்கக் கூடாது. மக்கள் தங்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு விவரங்களையோ அல்லது காசோலையையோ (வங்கி கணக்கு எண் உள்ளதை) பொருட்கள், அல்லது பள்ளிக் கட்டணம், தண்ணீர், மின்சாரம், தொலைபேசி மற்றும் இதர பயன்பாட்டுக் கட்டணங்களுக்கு கொடுக்கிறார்கள். இதேபோல், உங்கள் அடையாளத்தை எந்தப் பயமும் இல்லாமல் தாராளமாகப் பயன்படுத்தி உங்கள் அடையாளத்தை நிறுவிக்கொள்ளலாம்”. UIDAI தனது இணையதளத்தில் பாதுகாப்பு அறிவிப்பை கூறியுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டைகளைப் பெற்றவர்களை விரைவில் புதுப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை, அரசு சேவைகளை எளிதாக அணுகுதல், வங்கிக் கணக்குகள் மற்றும் பயணம் ஆகியவற்றை எளிதாக்குவதன் மூலம் வாழ்க்கையை எளிதாக்க உதவும் என்று UIDAI கூறுகிறது.